எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: January 31, 2015

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – தொகுப்பு (1)

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான மீளாய்வின் அவசியத்தை இன்றைய கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் இனவாதமும் வலியுறுத்தி வருகிறது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் ஏற்பட்ட பல சச்சரவுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட 1915 இனக்கலவரம், அதனைத் தொடர்ந்து மாற்றம் பெற்ற அரசியல் நிலவரங்களின் அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களின் அன்றைய தலைவர்கள் தமது இன ரீதியான ஒற்றுமையை நிலை நாட்டுவதை விட மத ரீதியான பிரதிநிதித்துவத்தை தேர்ந்து கொண்டனர்.
19ம் நூற்றாண்டின் முடிவில் பொன் இராமநாதன் இலங்கையில் சோனகரென்று தனி இனமில்லை என வாதிட்டதை முறியடிக்க எம் தலைவர்கள் போராடிய வரலாறு மிக விரைவில் 1915 கலவரத்தின் பின்னர் மாற்றம் பெற்றது. அதன் அடிப்படையில் எண்ணிக்கையில் சிறிய அளவாகவே இருந்த சோனக சமூகத்தை “முஸ்லிம்கள்” என்று அழைப்பதன் மூலம் இதர இஸ்லாமிய சமூகங்களான மலே மற்றும் போரா சமூகங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியாகவும் காலத்தின் கட்டாயமாகவும் அன்றைய தலைவர்களால் அது பார்க்கப்பட்டது.
இதனடிப்படையில் “முஸ்லிம்” அடயாளம் பற்றிய தீவிர செயற்பாடுகள் வளர்க்கப்பட்டிருந்த அதேவேளை கலாச்சாரப் பிளவுகள் மறுபுறத்தில் இச்சமூகங்களுக்கிடையிலான பிரித்து வைக்கும் கோட்டினை இணைக்க மறுத்தமையும் நினைவுகூறப்பட வேண்டியது. இதன் விளைவால் இன்றளவும் முஸ்லிம்கள் என்று ஒற்றுமை பாராட்டினாலும் கலாச்சார மற்றும் பண்பாட்டு ரீதியாக மேற்சொன்ன சமூகங்கள் சோனகர்களிலிருந்து பிரிந்தே காணப்படுகிறார்கள்.
அதன் தொடர்ச்சியில் சோனக சமூகத்தின் மத்தியில் மாத்திரம் மிகத் தீவிரமாக வளர்ச்சி பெற்ற இஸ்லாமிய கொள்கைப் பிரிவினைகள் அன்றைய காலம் வலியுறுத்தியிருந்த ஒற்றுமையை ஒரு நூற்றாண்டுக்குள் பல்வேறு பிளவுகளாகவும கூறுகளாவும் பிரித்திருக்கும் நிலையில் இன்று மீண்டும் இலங்கை முஸ்லிம்கள் தம் இன அடையாளம் தொடர்பான கேள்விகளை முன் வைத்து விடை காண நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் தமது இன அடையாளம் தொடர்பாக புதிதாக விளக்கம் தேட முனையும் ஒருவருக்கு முதலில் வரும் கேள்வியானது எமது இனத்தின் பெயர் என நாம் கூறிக்கொள்ளும் “மூர் (ஆங்கிலம்)” அல்லது “சோனகர் (தமிழ்)” அல்லது “யோனக (சிங்களம்)” எனும் பதங்கள் ஏன் எமக்கு வழங்கப்பட்டன எனும் கேள்வியாகும்.
இது தொடர்பான ஆய்வுகள் ஏலவே முன்கண்ட உரைகளில் தெளிவாக இருப்பினும் மேலோட்டமாக சுருக்கமாகக் கூறின் “மூர்” எனப்படும் பதம் எமக்கு போர்த்துக்கீயரின் இலங்கை வருகையின் பின்னர் (கி.பி 1517) பதினாறாம் நூற்றாண்டிலிருந்தே எமது சமூகத்தைக் குறிப்பதற்காக உபயோகத்திற்கு வந்தது. அதற்கான தேவையை போர்த்துக்கீயர் எமது வர்த்தக – சமய மற்றும் கலாச்சார, பண்பாட்டுக் காரணங்களைக் கொண்டு அடையாளப்படுத்திக்கொண்டார்கள்.
தமிழில் “சோனகர்” எனக் குறிக்கப்படும் வழக்கம் மஹாபாரதம் மற்றும் இராமாயணம் போன்ற சங்க கால தமிழ் இலக்கியங்களிலும் பதிவாகியிருக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில்53  அவை அரேபியர்களையே குறித்திருப்பதையும் ஆனாலும் அங்கு பேசப்படும் அரேபியர்கள் இஸ்லாம், கிறிஸ்தவமும் அறிமுகப்படுத்தப்படுவதற்கும் முற்காலத்திற்குரியவர்கள் எனும் அடிப்படையிலும் பிற்காலத்திலும் இலங்கையில் பரவிய தமிழ் இதன் இரட்டை ஒற்றுமையைக் கொண்டு எமது சமூகத்தை “சோனகர்” என்றே விளிக்கலாயிற்று.
சிங்கள மொழியில் “யோனக” எனும் பதம் புழக்கத்தில் கலந்து கொண்டதன் வரலாறு இன்றைய சிங்கள மொழியின் பண்டைய கால வடிவங்களான ஹெல மற்று எளுவிலும் இருந்திருப்பதை மஹாவம்சம் போன்ற சிங்கள வரலாற்று இலக்கியங்களும் எடுத்தியம்பியிருப்பதனால் அதுவும் இஸ்லாம் உலகில் அறிமுகமாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே பாவிக்கப்பட்ட ஒரு சொல்லாக இருப்பதைக் கண்டோம்.54
எனினும், இவ்வாறு ஒவ்வொரு மொழியிலும் இன்றைய முஸ்லிம் சமூகம் அதே பதங்களைக் கொண்டு விளிக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணங்கள் இல்லாமலில்லை என்பதை வரலாற்றுத் தொடரில் முன் கண்ட உரைகள் ஆராய்ந்திருக்கிறது.
இதற்காக தனித்தனி காரணங்களைக் பிரித்தறிய முன்பதாக அதன் ஒற்றுமையான அம்சங்களைப் பார்ப்போமாயின் இஸ்லாம் அறிமுகமானதன் பின்னரான காலத்தில் இலங்கைச் சோனகர்களுக்கும் அரேபியர் மற்றும் மேற்கு ஆபிரிக்க மக்களுக்குமிடையிலான மார்க்க மற்றும் செயற்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டு அவை நியாயப்படுத்தப்படுகிறது.
எனினும் அதற்கு முற்பட்ட காலத்தில் இந்த தொடர்பினை இம்மொழிகளும் சொற்பிரயோகங்களும் எவ்வாறு நியாயப்படுத்துகின்றன என்று பார்ப்பின் அங்கும் பண்பாட்டு, கலாச்சார மற்றும் கொள்கைத் தொடர்புகள் காணப்பட்டிருப்பதை இவ்வுரைத் தொடர் ஏலவே ஆராய்ந்திருக்கிறது.
இலங்கை மண்ணில் இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்திலும் “ஓர் இறைக் கொள்கை” யில் ஒரு சமூகம் வாழ்ந்திருந்தமையும், வெளிப்படையான வரலாற்றில் கூறப்படும் இடையர்களுக்கும் – யெமன் போன்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்த அன்றைய இடையர்கள் மற்றும் இன்றும் ஒரு சில பாரம்பரிய வணக்க வழிபாட்டுத் தொடர்புகள் மூலம் மேற்கு ஆபிரிக்காவுடன் தொடர்பு படும் நாகர்கள் மற்றும் வேடர்களின் தொடர்புகளும் கூட கடந்த உரைகளில் ஆராய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.
உலக வரலாற்றைப் பொறுத்தவரை “மூர்” எனும் சொற்பதத்தின் தெளிவான தொடர்பை போர்த்துக்கீயர் எமது மூதாதையரை விளிக்க உபயோகித்தது ஒரு தற்செயல் இல்லை என்பது தெளிவானது. போர்த்துக்கீயர் அன்று இம் மண்ணில் கண்ட சோனக சமூகம் இஸ்லாம் வலுவாக வளர்ந்திருந்த காலத்திற்குரியது என்பதால் அவர்களை ஆண்ட மூர் சமூகத்தின் பழக்க வழக்கங்கள், இஸ்லாமிய பண்பாடு மாத்திரமன்றி கடல் வணிகத் தொடர்புகள் மற்றும் சமயத் தொடர்புகள் அதை அவர்களுக்கு நியாயப்படுத்திக் கொடுத்திருந்தது.
எனினும், இதற்கு சற்று முந்திய காலப்பகுதியில் சீனக் கடலோடி Zheng He(1371–1433) கண்டிருந்த இலங்கை முஸ்லிம் சமூகம் அவர் வழங்கிய கல்வெட்டில்55  பாரசீக மொழியினால் விளிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு இதன் பின்னணி தொடர்பான ஆராய்வுகளையும் அதேவேளை கம்போயா (Kamboja) இனத்தவரின் கலப்பு குறித்தும் ஆராயும் போது இலங்கை மண்ணில் சோனக மக்களின் விரிவான பரவல் தெளிவாகும்.
அதாவது இலங்கை சோனகர்கள் என்றழைக்கப்படுபவர்கள் வெறுமனே இஸ்லாமிய அறிமுகத்திற்குப் பின்னர் அரேபிய வணிகர்களால் இந்த மண்ணில் உருவாக்கப்பட்ட ஒரு சமூகமன்றி அதற்கு முற்பட்ட காலத்திலிருந்து இம்மண்ணில் வாழ்ந்து வந்த பூர்வீகக் குடிகளின் ஒரு பகுதியினர் என்பதுதான் அது.
இதனை நிரூபிக்கும் வரலாற்றுத் தொடர்புகளை விரல் நுனியில் வைத்து நியாயப்படுத்தும் அளவுக்கு எக்காலத்திலும் இந்த “குறிப்பிட்ட” சமூகத்தின் வரலாறு தனியாக நிரல்படுத்தப்படவில்லை, பதியப்படவில்லை எனும் துரதிஷ்டமான செய்தியே இருப்பினும், உலக வரலாறு மற்றும் குறிப்பாக இந்தியா ஊடாக இலங்கைக்குள் பிரவேசித்த ஓர் இறைக்கொள்கையுடன் வாழ்ந்த சமூகங்கள் பற்றிய பண்டைய தமிழ் , பாளி, சமஸ்கிருத பதிவுகளைக் கொண்டு தொடர்பு படுத்தக் கூடியதாக இருக்கிறது.
மஹாவம்சம் பிற்காலத்தில் மீளத் தொகுக்கப்பட்ட போது விஜயன் வழி வந்ததாகக் கூறப்படும் சிங்கள இனம் மற்றும் அது தொடர்பான தகவல்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் இலங்கைத் தீவில் வாழ்ந்த ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு.
பாளியில் அமையப்பெற்ற பிராமி எழுத்து முறையிலான பதிவுகளில் சிலவற்றில் கம்போயாக்கள் (பிற்காலத்தில் ஹம்பயாக்கள்) என அழைக்கப்பட்டவர்கள் இலங்கைத் தீவில் ஒரு சமூகமாக அல்லது குறிப்பிட்ட இடத்தில் குழுமமாக வாழ்ந்தமையை பதிவாக்கியுள்ளது. கி.மு காலப்பகுதிக்குரிய இப்பதிவுகளுக்கு ஆதாரம் சேர்க்கும் மஹாவம்சம் குறித்த காலப்பகுதியில் அங்கு “யோன” சமூகத்தினர் வாழ்ந்து வந்தமையை தெளிவாக்கியிருக்கிறது.
அது மாத்திரமன்றி கம்போயாக்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படின் அவர்கள் இத்தீவில் பரந்து வாழ்ந்திருக்கின்றமையும் மஹாவம்சம் கூறும் “யோன” சமூகம் தீவின் வட மேற்கு பகுதியில் மாத்திரமன்றி அநுராதபுர, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, குருநாகல, பொலன்நறுவ, ஆகிய பகுதிகளிலும் ஆகக்குறைந்தது கி.மு 200 காலப்பகுதியில் பரந்து வாழ்ந்தமைக்கான இலக்கிய சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு எடுத்துரைக்க முடியும்.56
அது மாத்திரமன்றி, பிற்காலத்தில் போர்த்துக்கீயர் கண்ட மூர் இனத்தவர்கள் போன்றே கம்போயாக்களும் வர்த்தகத்தில் அதிக நாட்டமுள்ளவர்களாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களாகவும் இருந்திருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 57
இவற்றின் அடிப்படையில் இவ்வுரைத் தொடரில் நாம் முன்னர் ஆராய்ந்த கம்போயாக்களின் வரவு மற்றும் இச்சொற் பிரயோகத்தின் திரிபு, பாவனை அதன் பின்னரான சமூகக் கலப்பு, ஓர் இறைக் கொள்கை இணக்கப்பாடு போன்றன அன்றைய கம்போயாக்கள் மற்றும் யோனர்களை இணைத்திருப்பதற்கான சான்றுகளே அதிகம் காணப்படுகின்றன.
அத்தோடு கி.மு 200க்கு முற்பட்ட பிராமி பதிவுகளில் “மரயா” எனும் சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லானது ஒரு குறிப்பிட்ட இனத்தவரைக் குறிக்கும் வகையிலேயே பதிவாகியிருப்பதை அத்தோடு இணைத்து விளிக்கப்பட்டிருக்கும் வேறும் இரு சொற்களைக் கொண்டு பிரித்துப் பார்க்க முடிகிறது. எனினும் கி.பி 300 அளவில் உருவாக்கப்பட்ட பாளி பதிவில் இதே சொல் மருவி “மல்லேயா” அல்லது “மல்லியா” என்று  உச்சரிக்கக் கூடிய வகையில் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதற்கான சான்றுகள் இருக்கிறது. இவ்வாறான ஒற்றைச் சொற்கள் சிங்கள வராலாற்று நூல்களில் தவறியிடம்பெற்றிருப்பதானது இலங்கையில் வேறு இனத்தவர்களின் இருப்பை பறைசாற்றுவதாகவே இருக்கிறது.58
இதே காலப்பகுதியில் சிங்கள இலக்கியங்கள் காணும் “ஜன பத” எனும் சொல்லானது குடியிருப்பு அல்லது கிராமங்களைக் குறிக்கின்ற அதேவேளை நதிகளை அண்டிய பிரதேசங்களில், பண்டைய காலங்களில் இவ்வாறான குடியிருப்புகள் இத்தீவில் அமைந்திருந்தமையையும் கி.பி 150 அளவில் வரையப்பட்ட க்ளோடியஸ் தொலமியின் இலங்கைத் தீவு பற்றிய வரைபடம் தெளிவாக்குகிறது.59
இவ்வாறு பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஆராயும் போது ஒரு குறிப்பிட்ட சமூகம் ஒரு இடத்தில் மாத்திரம் குடியிருக்க வேண்டும் எனும் நிலைப்பாட்டிற்குப் புறம்பாக இலங்கையின் முக்கிய பகுதிகளில் பரந்து வாழ்ந்திருக்கின்றமையும் அப்பிரதேசங்களில் பெரும்பாலும் இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம் சமூகம் ஏதோ ஒரு தொடர்பில் வாழ்ந்து வருவதையும் காணலாம்.
இதனடிப்படையில் இன்றைய முஸ்லிம்கள் – அன்றைய சோனகர்கள் அதற்கு முந்தைய கம்போயாக்கள் மற்றும் யோனர்களின் ஒற்றுமைகள் மற்றும் வாழ்வியல் முறைகள் பற்றிய விரிவான ஆராய்வும் தேவைப்படுகிறது.
தொடரும்….
- மானா
முன்னைய பதிவுவரலாறு அறிமுகம்
——————————————————————————————
References:
56.  The Beginnings of Civilization in South India, Journal of Asian Studies,            (May, 1970) Clarence Maloney).
57. The Archaeology of Seafaring in Ancient South Asia (Cambridge World           Archaeology – 2003)
58. Inscriptions; Ancient Kamboja, People and the Country  (1981)                           Dr J. L. Kamboj
59. புத்தளம் முஸ்லிம்கள்: வரலாறும் வாழ்வியலும் – கலாநிதி                       எம்.எஸ்.எம். அனஸ்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்