எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: January 31, 2015

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – தொகுப்பு 2 (முன்னுரை)

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான விரிவான சிந்தனைகள் சமூக மட்டத்தில் பகிரப்பட்டும் அலசப்பட்டும் வருவதைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சியுண்டாகிறது. பேரன்பு மிக்க வல்ல இறைவனுக்கே எல்லாப் புகழும்!
இலங்கைத் தீவில் இன்றைய காலத்தில் “முஸ்லிம்கள்” என அறிமுகப்படுத்திக்கொள்ளும் சோனகர் சமூகம் தமக்கிருக்கும் பாரம்பரிய பூர்வீகம் தொடர்பான அறிவையும் தேவையையும் 9ம் நூற்றாண்டோடு மட்டுப்படுத்திக்கொள்வதையும் அதற்கு முன்னர் ஓரிறைக் கொள்கையாளர்களாக உள்நாட்டவர்களும், வெளிநாட்டிலிருந்து குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்தும் வந்து கலந்து கொண்டவர்கள் தொடர்பான தெளிவான ஆய்வினை மேற்கொள்ள மறுப்பது தொடர்பிலும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு முதற் தொகுதியின் இறுதிப் பதிவு வரை (இலங்கை முஸ்லிம்களின் வரலாறு  V- 9 ) விரிவாக ஆராய்ந்திருக்கிறோம்.
நவீன காலத்தில் முஸ்லிம் சமூகம் தமது மார்க்க அடையாளத்தையே விரும்பியதாலும் “முஸ்லிம்” என்று அழைக்கப்படும் போது அதன் மூலம் மலேயர்கள், போராக்கள் உட்பட்ட இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்களும் இணைந்த சமூகமாகத் தம்மை வெளிக்காட்டிக்கொள்ளலாம் எனும் நல்லெண்ணத்தாலும் கூட தமது இன அடையாளத்தை ஏறத்தாழ மறந்தே வாழ்கிறது.
அதிலும் குறிப்பாக 1960 களுக்குப் பிந்திய வெளிநாட்டுத் தொடர்பின் அதிகரிப்பினாலும் கலாச்சாரக் கலப்பினாலும், கொள்கை அமைப்புகளின் பெருக்கத்தினாலும் தமது இன அடையாளம் தொடர்பான தேவையை இலங்கை முஸ்லிம் சமூகம் மறந்திருக்கிறது.
ஆனாலும் இலங்கையின் சனத்தொகைக் கணிப்பீடு என்று எப்போது வெளியாகினாலும் இன ரீதியான கணக்கெடுப்பின் போது “சிங்களவர்கள்”, “தமிழர்கள்”, “சோனகர்கள்” எனும் மூன்று பிரதான இனங்களே அடையாளப்படுத்தப்படுகின்றன.  இது தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்ள தற்போது குடிசன மதிப்பீட்டுப் பிரிவுக்கென ஒரு இணையத்தளம் இருப்பதால் வாசகர்கள் அங்கு சென்று நேரடியாகவே உறுதி செய்து கொள்ளலாம். ( http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2012Visualization/htdocs/index.php?usecase=indicator&action=Map&indId=11 )
எனினும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலும் தொடரும் காலத்திலும் முஸ்லிம்களை “தமிழர்கள்” எனும் மொழி ரீதியான அடையாளத்துக்குள் (இந்தியா போன்று) வகைப்படுத்துவதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வந்ததையும் அதை எம் முன்னோடிகள் மறுத்துரைத்து “சோனக” சமுதாயத்திற்கான அரசியல் பலத்தினை நிறுவப் போராடிய வரலாறுகளும் முன் கண்ட உரைகளில் அலசப்பட்ட விடயங்களாகும்.
இவ்வாறு போராடி நிரூபிக்கப்பட்ட வரலாற்றின் ஆழமான வெற்றியின் பயனாகவே இன்று வரை இலங்கை அரசியற் சட்டத்திற்கமைய இலங்கையில் சோனகர் என ஒரு இனம் இருப்பதாகவும் அவர்கள் முஸ்லிம்களாக தம்மை மத ரீதியிலான அடையாளத்திற்குட்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள் என்பதை இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
எனினும், அரச தஸ்தாவேஜுக்களில், குறிப்பாக உங்கள் பிறப்புச் சான்றிதழ்களில், இனம் எனும் இடத்தில் எப்போதுமே சோனகர்கள் (Sri Lankan Moors / Moors) என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். சில இடங்களில் கரையோர சோனகர்கள் எனும் பதம் பெரும்பாலும் கிழக்கிலங்கை பிறப்புச் சான்றிதழ்களில் ஒரு சில வேளைகளில் பாவிக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகள் உள்ளன. அதற்கான காரணம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை சோனக சமூகம் தொடர்பான வரலாற்று ஆதாரங்களை மழுங்கடிக்க முனைந்த பொன். இராமநாதன் இச்சமூகத்தை இரண்டாகப் பிரித்து பெரும்பாலும் சோனகர்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்தவர்களே எனவே இலங்கையர்களே இல்லையெனும் அளவிற்கு வாதாடி கரையோரச் சோனகர்கள் எனும் பிரிவை உருவாக்க முனைந்ததாகும்.
ஆயினும், சோனக சமூகம் எப்போதுமே இலங்கை மண்ணில் தனித்துவத்துடன் வாழ்ந்த சமூகம் மாத்திரமன்றி தமக்கென ஒரு தனித்துவமான கலாச்சாரப் போக்கையும் கொண்டிருந்தமையை அந்நிய ஆக்கிரமிப்புக்கு முந்திய கால கட்டங்களிலேயே சிங்கள மன்னர்கள் கூட ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதற்கான சான்றுகளும் முன் கண்ட பதிவுகளில எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.
சோனக சமூகம் தொடர்பாக மேலதிகமாக வாதிக்க வரும் மேலும் சிலர் அரேபியர்கள் வரும்போது தனியாக வந்ததாகவும் அவர்கள் தமிழ், சிங்கள பெண்களை மணமுடித்த காரணத்தினால் அவர்கள் தாய் மொழி சிங்களமானது, தமிழானது எனவும் வாதிக்க முன்வருவர்.
எனினும், காலப்பிறழ்ச்சியின்றி வரலாறுகளை ஆராய்வின் இலங்கைத் தீவில் சோனக சமூகம் முஸ்லிம்களாக அடையாளப்பட்ட பின்பு கூட 15ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தை மிகப் பிரபலமான சீனக் கடலோடி Zheng He பாரசீக மொழிகொண்டு விளித்திருந்த சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரியம் தொடர்பான வேறு ஆதாரங்களை பறைசாற்றி நிற்கும். (பார்க்கhttp://www.sonakar.com/?p=433)
எனவே, சிங்கள – தமிழ் எனும் இரு மொழியடையாளங்களுக்குப் புறம்பாக இலங்கை வரலாற்றில் எப்போதுமே “சோனகர்” எனும் இனம் தனித்துவத்துடன் காணப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே இந்த இனத்திற்குத் தனியான அடையாளத்தினை இலங்கை வரலாறு கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.
அந்த தனித்துவத்தின் பின்னணி மற்றும் அதன் வளர்ச்சி தொடர்பில் இவ்வரலாற்று ஆய்வின் முதற் தொகுதி பல பதிவுகளில் விரிவாக ஆராய்ந்து ஆதாரங்களை முன் வைத்திருக்கிறது. சங்க கால தமிழ் இலக்கியங்கள் கூட “சோனகர்” எனும் பிரிவினர் தொடர்பான தனியான பார்வை கொண்டிருக்கும் பதிவுகள் இத்தொடரில் காணக்கிடைக்கிறது.
எமது பாடத்திட்டங்களிலோ பாசறைகளிலோ மத்திய கிழக்கு வரலாறு போதிக்கப்படும் அளவுக்கு இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் இலங்கையில் “இஸ்லாம்” அறிமுகமாவதற்கு முன்னராக வரலாற்று ஆசிரியர்கள், கடலோடிகள் மற்றும் இலக்கியங்கள் விளித்து நிற்கும் சோனக சமூகம் பற்றிய விழிப்புணர்வும் அவர்கள் யார்? எவ்வாறு வாழ்ந்தார்கள்? எவ்வாறான இறை கொள்கை கொண்டவர்களாக இருந்தார்கள்? அவர்களோடு யார் கலந்தார்கள் அல்லது அவர்கள் யாரோடு கலந்தார்கள் போன்ற விடயங்களை எமது சமுதாயம் தேடி ஆராய மறுத்து வந்துள்ளது.
சிங்கள மன்னர்களிடம் சோனக சமுதாயம் பெற்று வந்த சலுகைகளை இன்று வரை அனுபவிக்கும் இலங்கை (சோனக) முஸ்லிம் சமூகம் இந்தப் பட்டயங்களின் பின்னணி தொடர்பில் போதிய விளக்கத்தினை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல மறுப்பதற்கான ஆளுமையை இன்றைய வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் உருவாக்குகிறது.
எனவே ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பதாக தமக்கென ஒரு மொழியுடன், அரசியல் ஆளுமையுடன் தனிக் கலாச்சாரத்துடன் வாழ்ந்த சோனக சமூகம் போர்த்துக்கீய ஆக்கிரமிப்பின் போது வலுவிழந்து தம் இலக்கியம், வாழ்க்கை மற்றும் வணிக ஆளுமையையும் இழந்ததைக் கூட மறந்த நிலையில் உலகின் வேறு பாகங்கள் மீதான மோகத்தோடு வரையறுக்கப்பட்ட சிந்தனைகளினால் சுய வரலாற்றை மறந்த சமூகமாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால சந்ததியினர் மாறிச்செல்லும் அபாயம் இருப்பதை உணரக் கடமைப்படுகிறோம்.
இத்தீவின் வரலாறு அறியப்பட்ட காலம் முதல் சோனக சமூகத்தின் தனித்துவம் பற்றிய பதிவுகள் ஆங்காங்கு இருந்து வந்திருக்கிறது. தொலமி முதல் இப்னு பதூதா, Zheng He வரை அன்றைய உலக வரலாற்றைப் பதிவாக்கிய கடலோடிகள் தமது பதிவுகளின் போது இச்சமூகத்தின் தனித்துவம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதையும் கடந்த உரைகளில் காணலாம்.
இதில் இஸ்லாத்திற்கு முன்னைய மற்றும் இஸ்லாம் இலங்கையில் அறிமுகமான பின்னரான இரு காலத்திற்குமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆயினும், இலங்கை சோனகர்களின் ஆதி மூலத்தை அறிந்து கொள்வதில் பலருக்கு ஆர்வமிருக்கிறது.
இதற்கான தேடலை உலகில் வேறு எங்கு கலாச்சார, பழக்க வழக்க ரீதியில் இலங்கை சோனகர்களுடன் ஒத்துப் போகக் கூடியவர்கள் இருக்கிறார்கள் எனும் வெளிப்படையான தேடலைக் கொண்டு மாத்திரம் ஏற்றுக்கொள்ளத் தயாரானவர்களுக்காகக் கூட “பத்வியுன்களுக்கும்” இலங்கை சோனகர்களுக்குமான தொடர்புகள்  பற்றிய ஆராய்வு மற்றும் மேற்கு ஆபிரிக்க சமூகங்கள் அவர்களுடனான பழக்க வழக்க ஒற்றுமைகள் போன்ற விடயங்களும் கடந்த கால உரைகளில் ஆராயப்பட்டுள்ள விடயங்களாகும்.
எனவே, இலங்கை சோனக சமூகம் தமது சொந்த வரலாறு தொடர்பில் சொந்த நாட்டில் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் மற்றும் சமய, பண்பாட்டு தொடர்புகள் ஊடான வெளியுலகத் தொடர்புகள் குறித்த மேலும் விரிவான சில விபரங்களை இத்தொகுதியில் இணைத்துக்கொள்வதோடு சோனக சமூகத்தின் இஸ்லாத்திற்கு முன்னான வாழ்க்கை மற்றும் கலாச்சாரம், சிங்கள மக்களுடனான அன்யோன்யம், ஆளுமை மற்றும் சமூகக் கட்டமைப்பு, வணிகம், வாழ்வியல் போன்ற பல பிரிவுள் ஊடாகவும் சிங்கள இலக்கியங்கள், வரலாற்றுப் பதிவுகள் மற்றும் தொல்லியல் சான்றுகள் ஊடாக சோனக சமூகத்தின் இருப்பு குறித்த பார்வைகளையும் நாம் ஆராய விளைகிறோம்.
இன்ஷா அல்லாஹ் அதற்கான பயணத்தில் இறைவனின் நல்லாசிகளையும் அருளையும் வேண்டிப் பிரார்த்தித்தவனாக தொகுதி 2ன் முதற் பதிவோடு உங்களுடன் இணைந்து கொள்கிறேன்.
ஜஸாகல்லாஹ்.
- மானா.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்