
எகிப்தை பூரவீகமாகக் கொண்ட டாலியா முஜாஹித் அமெரிக்காவில் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள மதங்களுக்கான ஆலோசனை சபையில் முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பானவராக பதவி வகித்து வருகின்றார்.
வெள்ளை மாளிகையில் பணியாற்றும் முதல் முஸ்லிம் பெண்ணாக விளங்கும் டாலியா அமெரிக்காவிலுள்ள 10 மில்லியன் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் அமெரிக்க நிர்வாகத்திற்கும் இடையிலான இணைப்புப் பாலமாக விளங்குகின்றார்.
கடந்த மூன்று தசாப்தங்களாக ஐக்கிய அமெரிக்காவில் வசித்து வரும் இவர் வியாபார நிர்வாக துறையில் முதுமானிப் பட்டத்தை பெற்றுள்ளதுடன் இரசாயன பொறியியல் துறையில் இளமானிப் பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார். தனது கல்வித் துறைகளுக்கு வெளியே சமூக அரசியல் செயற்பாடுகளில் தீவிர பங்கெடுத்துவரும் டாலியா முஜாஹித் American Centre for Muslim Studies எனும் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் அதன் சிரேஸ்ட அரசியல் பகுப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் முன்னணி அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் கலாநிதி ஜோன் எஸ்பொசிடோவுடன் இணைந்து Who Speaks for Islam?, What a Billion Muslims really think? ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். இந்நூல்கள் ஆறு வருட ஆய்வு மற்றும் 35 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 50,000 இற்கு மேற்பட்ட நேர்காணல்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவையாகும்.
சர்வதேச முஸ்லிம் பெண்களுக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன என இங்கிலாந்து ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது டாலியா அளித்த பதில் இங்கு குறிப்பிடத்தக்கது. ”முஸ்லிம் பெண்மணிகள் கண்டுபிடிப்பாளர்களாக, எழுத்தாளர்களாக, சமாதானத் தூதுவர்களாக, நல்ல தாய்மார்களாக உருவாகி அமைதியான உலகை அடுத்த சந்ததிக்கு கையளிப்பதே அவர்களது தலையாயக் கடமை. முஸ்லிம் பெண்களின் சக்திமிக்க, காத்திரமான பங்களிப்பை இவ்வுலகம் வேண்டி நிற்கின்றது. எனவே, உங்களது மகத்தான பங்களிப்பைச் செய்ய இன்றே தயாராகுங்கள்” என சர்வதேச முஸ்லிம் பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
முஸ்லிம் பெண்களில் உடனடியாக ஏற்பட வேண்டியது மனப்பாங்கு மாற்றமே. எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் துணிவும் பக்குவமும் எமது பெண்களின் மூதனமாக வேண்டும்.
வாழ்க்கையில் தான் கற்ற பாடம் அதுவே என்கிறார் டாலியா.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !