
மிகச் சிறந்த ஆய்வாளர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முக ஆளுமை கொண்டவரான சுமையா Islam Expo எனும் பிரபல இஸ்லாமிய வலைப்பின்னலில் இஸ்லாம் தொடர்பான விரிவான விவாதங்கள், கலந்துரையாடல்கள், ஆய்வரங்குகள் ஊடாக தனது தொடரான பங்களிப்பினை நல்கி வருகின்றார்.
லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேய மற்றும் ஆபிரிக்க கற்கைகள் பாடசாலையில் கருத்தியல் வரலாற்றுத் துறை ஆய்வாளராக பணியாற்றி வரும் சுமையா கன்னுஸி தத்துவத் துறையில் கலைமானி பட்டத்தை பெற்றுள்ளதுடன் முதுகலைமானிப் பட்டம் மற்றும் கலாநிதிப் பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.
லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் மற்றும் கட்டாரின் அல் ஜஸீரா ஆகிய இணையங்களில் முக்கிய பத்தி எழுத்தாளராகவும் இவர் திகழ்கின்றார். இன்றைய அரபுலக போராட்டங்கள் குறித்து இவர் கார்டியனிலும், அல் ஜஸீராவிலும் எழுதி வரும் பத்திகள் மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி வருகின்றன.
ஐரோப்பிய புலமையாளர்களின் இஸ்லாம் தொடர்பான புனைவுகளையும், உருத்திரிக்கப்பட்ட தோற்றத்தையும் உடைத்தெறிவதே சுமையா கன்னுஸியின் எழுத்தின் மையமாகும். லண்டனின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக திகழும் சுமையா லெபனான் மீதான இஸ்ரேல் யுத்தம் மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பு என்பன குறித்து ஆற்றிய உரைகள் ஆயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாதோரிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு ஸியோனிஸ வட்டாரங்களில் பெரும் எதிர்ப்பை உண்டுபண்ணின.
பாரம்பரிய அடக்குமுறை மற்றும் மேற்கின் கட்டற்ற தாராளவாதம் என்பவற்றின் நடுவே இஸ்லாம் நடுநிலையான கண்ணோட்டத்தில் பெண்களை எவ்வாறு அணுகுகின்றது என்பதற்கு உதாரணமாக திகழும் சுமையா கன்னுஸி இஸ்லாமிய சமூக மாற்ற செயற்பாடுகளில் பெண்களின் பாத்திரம் எது என்பதற்கு மிகச் சிறந்த முன்னுதாரணம் எனில் அது மிகையில்லை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !