மனிதப் பிறப்பு அல்லாஹ்வின் அருளாகும். இப்பிறப்பின் பருவங்களில் இளமைப் பருவம் பிரதானமானது அது அல்லாஹ்வின் மகத்தான அருள். நாளை மறுமையில் இளமைப் பருவம் என்ற அருளைப் பயன்படுத்திய விதம் குறித்து அல்லாஹ் விசாரிப்பான். இளமைப் பருவத்தின் பிரதான கட்டமான கட்டிளமைப் பருவம் (Teen age) பாடசாலையிலேயே கழிகிறது.
இப்பருவம் மீண்டும் மனிதனுக்கு அனுபவிக்கக் கிடைக்காத பருவம். இந்தப் பருவத்தை மாணவர்கள் அருளாகப் பார்ப்பதை விட வேதனையாகவே பார்க்கிறார்கள். வீட்டில் பெற்றோர்கள்,பாடசாலையில் ஆசிரியர்கள், தெருவில் மூத்தவர்கள் என எல்லோருக்கும் கட்டுப்பட வேண்டியுள்ளதே?! விலங்கிடப்பட்ட ஒருவகை அடிமை வாழ்விது. எப்போது, எப்படி இந்த விலங்குகளை உடைத்துக் கொண்டு சுதந்திர புருஷர்களாக மாறுவது என்றுதான் மாணவர்கள் சிந்திக்கிறார்கள்.
கட்டுப்படுவதை விலங்கு,அடிமைத்துவம் என்று கருதுவது பிழையானது. நன்கு செவிமடுத்து அறிந்து உணர்ந்து கட்டுப்படுவதில்தான் வாழ்க்கையின் இன்சுவை நிறைந்திருக்கின்றது. செவிமடுப்பதற்கும் கட்டுப்படுவதற்கும் பயிற்சி பெறுகின்ற பாசறைதான் பாடசாலை. பரீட்சையை எதிர்கொள்ள பாடசாலையில் பயிற்சி பெறுகின்றோம். கோட்ட, வலய, மாகாண,தேசிய மட்டங்களில் நடைபெறுகின்ற ஆக்க, விளையாட்டுப் போட்டிகளை எதிர்கொள்ள பாடசாலையில் நாம் பயிற்சி பெறுகின்றோம். ஏன் கட்டுப்படுவதற்கு பயிற்சி பெறக்கூடாது?
ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான நிகழ்வை எதிர்கொள்ள பெற்றோரிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளவும் வழிகாட்டல்களை,ஆலோசனைகளைப் பின்பற்றவும் தவறுவதில்லை. தமது எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக அமைகின்றபோது முரண்படுவதற்கு தவறுவதில்லை. இது ஆபத்தானது. எதிர்கால வாழ்வை இருள்மயமானதாக மாற்றி விடும்.
பாடசாலைப் பருவம் கட்டுப்படுவதற்கான பயிற்சியைப் பெறும் பருவமாகும். கட்டுப்படுவதில் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது என்பதைப் புரிந்து பெற்றோர்களது ஆசிரியர்களது வழிகாட்டல்களை விருப்பமானவற்றிலும் உள்ளம் வெறுக்கின்றவற்றிலும் ஏற்று கட்டுப்பாடு என்ற கடமையை நிறைவேற்ற பயிற்சி பெறுவோம் வாழ்வின் இனிய சுவைகளை சுவைத்திடுவோம்!
ஆசிரியர்...
aharambook