
பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஸல்மா யாகூப் 1960களில் பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்த ஏழு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். பிரிட்டன் அரசியல் அரங்கில் செல்வாக்குப் பெற்று விளங்கும் இவர் பல விருதுகளையும் பரிசில்களையும் வென்றவர்.
மூன்று குழந்தைகளின் தாயான இவர் அமெரிக்காவின் தலைமையிலான பயங்கரவாதம் மீதான போரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த “போருக்கு எதிரான அமைப்பின் (Anti-war Movement) முக்கிய செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார்.
2006 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் பேர்மிங்ஹாம் நகரசபையில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் பேர்மிங்ஹாம் நகரசபையின் முதல்வராகவும் ரெஸ்பெக்ட் (Respect) கட்சியின் துணைத்தலைவராகவும் விளங்கினார். 2010 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரெஸ்பெக்ட் கட்சி சார்பில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரங்களின் போது எதிர்கொண்ட மரண அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சட்ட நடவடிக்கைகள் மூலம் வெற்றி கொண்டார்.
பிரிட்டனில் பல தேசிய விருதுகளை ஸல்மா வென்றுள்ளார். ஹாபஸ் பஸார் சஞ்சிகை பிரிட்டனின் முன்னணி 30 பெண்களில் ஒருவராக இவரை தெரிவு செய்துள்ளது. 2008இல் பேர்மிங்ஹேம் போஸ்ட் பத்திரிகை நடாத்திய கருத்துக் கணிப்பில் செல்வாக்கு மிக்க 50 பெண்களில் 11 ஆவது இடம் இவருக்கு வழங்கப்பட்டது. த டெய்லி டெலிகிராப் பத்திரிகையின் வருடாந்த கருத்துக் கணிப்பீட்டில் முதல் 100 பேரின் பட்டியலில் ஸல்மா இடம்பிடித்துள்ளார். த கார்டியன் பத்திரிகை ”பிரிட்டன் பொது வாழ்வில் மிகச் செல்வாக்குள்ள முஸ்லிம் பெண்” என இவரை வர்ணித்துள்ளது.
துணிச்சல் மிக்க ஓர் பெண்ணாக விளங்கும் ஸல்மா யாகூப் அரசியல் சமூக செயற்பாட்டாளராக பிரிட்டன் அரசியல் அரங்கில் தொடர்ந்தும் செயலாற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !