பொதுவாக ஏற்படக்கூடிய தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் போன்றதல்ல மனோவியாதி என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதுபோன்ற நோய் எனில், மாத்திரை, மருந்து அல்லது ஊசி மூலம் ஓரிரு நாளில் குணப்படுத்தி விடலாம்.
ஒருவருக்கு மனநோய் உள்ளதா? அது எந்த வகையைச் சேர்ந்தது? எதனால் ஏற்பட்டது? என்பதை குடும்பத்தில் இருப்பவர்கள் அறிந்து கொள்ளவே சிறிது காலம் பிடிக்கும்.
எனவே மனநோய்தான் என்பதை உறுதி செய்தபின் சம்பந்தப்பட்டவரை அலட்சியப்படுத்தாமல், அவருடன் தொடர்புடையவர்கள் பரிவுடன் நடத்த பழகிக்கொள்ள வேண்டும்.
மனநோய் ஏற்பட்ட நபர் கணவனோ, மனைவியோ அல்லது குழந்தைகளோ - அது ஆணோ அல்லது பெண்ணோ - யாராக இருப்பினும் அவர்களுக்கு உரிய சிகிச்சையை அளிக்கும் முன், அவர்களிடம் அன்பு செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதிரில் இருப்பவர்கள் மீது வன்முறையைக் கூட ஏவ நேரிடும். அதாவது, கையில் கிடைத்ததைக் கொண்டு தூக்கி வீசுவார்கள். கண்ணில் பட்டவர்களை அடிக்கக்கூடும். கண்ணாடி போன்ற பொருட்களை உடைக்க நேரிடலாம். எந்த மாதிரியான நிகழ்வானாலும், அவர்களின் நோயின் தீவிரம் கருதி, அவர்கள் மீது கோபப்படாமல் நிதானத்தைக் கடைபிடித்தல் அவசியம்.