By கே.ஆர்.இரமேஷ்
ஓரு நகரத்துக்குச் சென்று இந்த ஊரில் பெரிய மனிதர் யார் எனக் கேட்டால், யாரைப் பற்றிக் கூறுவார்கள்? அன்பானவரையா, புத்திசாலியானவரையா, விவேகமுடையவரையா என்றால் இல்லை. மாறாக, யாரிடம் நிறைய செல்வம் குவிந்து இருக்கின்றதோ அவரே ஊரின் பெரிய மனிதர்.
இப்படிப்பட்ட கருத்து மக்களிடம் ஆழமாக ஊடுருவி காணப்படுகிறது. பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு சமுதாயம் செயல்படுவதாலும் பொருளாதார ஆதிக்கமே முதன்மையாக இருப்பதாலும் பிழைப்புதான் முக்கியம் என்ற அளவுக்கு கல்வியை, பிள்ளைகளின் மனநிலையை, மனிதத்தை சுருக்கிக் கொண்டதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். காலத்திற்கேற்றவாறு தற்போதைய கல்வி முறையிலும் சமூக அமைப்பிலும் மாற்றம் தேவையாக உள்ளது.
உணவுப் பழக்கவழக்கங்களில் எத்தனை எத்தனை மாற்றங்கள்? சமூகத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ள உணவுப் பழக்கவழக்கங்களை அறிந்தாலே போதும் என்பார்கள். காரணம்,அவைதான் அவர்தம் எண்ணம், செயல், சிந்தனை ஆகியவற்றை தீர்மானிக்கிறது. ஆனால், இன்று உணவு பகட்டுக்காக உண்பதுபோல் மாறிவிட்டது. சுவைக்குத்தான் முக்கியத்துவம். அவசரம்தான் தாரக மந்திரம். விளைச்சலில் அவசரம், சமைப்பதில் அவசரம், உண்பதில் அவசரம், காத்திருக்க பொறுமையில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் இளம் தலைமுறைகளிடம் பொறுமையும் சகிப்புத்தன்மையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?
என்றைக்கு கூட்டுக்குடும்ப வாழ்வை துறந்து, தனிக்குடும்ப வாழ்வை துவங்க ஆரம்பித்தோமோ அன்றே பெரியவர்களின் அரவணைப்பு, தாத்தா-பாட்டி நீதிக்கதைகள், அதன்மூலம் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, பிள்ளைகளை மனிதநேயமற்ற இயந்திரங்களாக உருவாக்கத் தொடங்கி விட்டோம்.
வீட்டில் பிள்ளைகள் படித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெற்றோர், தாங்கள் மட்டும் தொலைக்காட்சியில் மூழ்கி திளைத்து இன்பம் காண்பது என்கிற மனோநிலை. பிள்ளைகளுக்காக தங்களது சந்தோஷத்தை விட்டுக்கொடுக்க, ஒதுக்கிவைக்க எத்தனைபேர் தயாராக உள்ளனர் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
மதுப்பழக்கத்துக்கு அடிமையாக உள்ள குடும்பத் தலைவரால் குடும்பம் சிதைந்துவிடுவதோடு அவர்கள் பிள்ளைகளின் மனநிலை எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்பதை யோசிக்க வேண்டும். அற்பசந்தோஷத்துக்காக வழிகாட்ட வேண்டிய பெரியவர்கள் ஒவ்வொரு நிலையிலும் தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டோம் என்பது வேதனையிலும் வேதனை.
பெரும்பான்மையான மாணவர்கள் தனியறைகளுக்குள் கணினி, செல்போன் வழியே ஆபாசப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வன்முறைக் காட்சிகள், மோசமான உணர்வுகளைத் தூண்டும் சினிமா ஆகியவற்றால் சிதைக்கப்படுகிறார்கள். அவசர காலத்தில் அவசரமாக வாழ்க்கை நடத்திவரும் பெற்றோர்களுக்குத் தங்கள் பிள்ளைகளைக் கூர்ந்து கவனிக்க நேரமில்லை. தனிமையில் வளரும் பிள்ளைகள் எப்படி சமூக அக்கறையுள்ளவர்களாக இருக்க முடியும்?
அடித்தட்டு மாணவர்களோ கற்பிதம் செய்துகொண்டுள்ள வாழ்க்கைக்காக ஏங்கத் துவங்கி விடுகின்றனர். ஒழுக்கம், மனிதநேயம் ஆகியவற்றை காற்றில் பறக்கவிட்டுவிட்டு கற்பனை உலகில் வலம்வரத் துடிக்கின்றனர்.
இதனால்தான் தவறான சேர்க்கை, விரும்பியதை அடைய வன்முறையில் ஈடுபடுவது, அதில் தோல்வி ஏற்படும்போது விரக்தி, பலாத்காரம், தற்கொலை, கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடுகின்றார்கள். கையில் தாராளமாகப் புரளும் பணம் அனைத்து பிரச்னைகளுக்கும் தாமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற மனோ தைரியத்தை அளிக்கிறது.
இப்படிப்பட்ட மனநிலையில் வளரும் பிள்ளைகளுக்குப் பள்ளிப்பாடம் கசக்கத்தான் செய்யும். வணங்க வேண்டிய ஆசிரியர்கள் எதிரியாகத்தான் தெரிவார்கள்.
குழந்தையாக இருக்கும்போது நோயிலிருந்து காக்க தாய் பத்தியம் இருப்பதுபோல பருவ வயது பிள்ளைகளையுடைய பெற்றோர் ஒழுக்கம் என்கிற பத்தியம் இருந்தால் பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
இளம் தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டிய நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் சமூகத்தின் அங்கத்தினராகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அறிவுசார் சமூகத்தை, எதிர்கால இந்தியாவை உருவாக்க உடனடியாகத் தேவைப்படுவது சமூக மாற்றம்தான்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !