மைமூனா பின்த் அப்துர் ரஹ்மான்
நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பனவற்றில் உணவினை நாம் உட்கொள்வதின் நோக்கம் எமக்கு அது போஷனையைத் தரவேண்டும் என்பதற்காக. அதேபோல் உறையுளை நாம் ஏற்படுத்திக்கொள்வதுநாங்கள் நிம்மதியாக நமது சுகங்களை அனுபவிப்ப தற்காக ஆனால் உடலுக்குப் போஷனையைத் தந்திடாத உணவு எதற்கு? நிம்மதியையும், சுகங்களையும் தந்திடாத வீடு எதற்கு? இதற்காகச் செலவாகும் பணம் வீணல்லவா?
அதேபோன்றுதான் எமது அடிப்படைத் தேவைகளில் ஒன்றுதான் உடையும். இதன் விஷயத்தில் நாம் இவற்றையொன்றும் பார்ப்பதில்லை. குறிப்பாக எமது இஸ்லாமியப் பெண்களின் ஆடை விஷயத்தில் இன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் ஆடை அலங்கார மையங்கள் பெருகி பல வகையான உடலைத் திறந்து காட்டக்கூடிய ஆடைகள் உற்பத்தி செய்வதில் போட்டி போடுகின்றனர்.
இவ்வாறான ஆடை அலங்காரங்கள் நாம் ஆடை அணிவதன் நோக்கத்தை நிறைவேற்றுகின்றதா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை! உடலை எவ்வாறு திறந்து நமது அலங்காரங்களை வெளிப்படுத்துவது என்று போட்டி போட்டுத் தயாரிக்கின்றனர்.
நிம்மதியையும், சுகத்தையும் தராத வீடு மாதிரியான இந்த நவீன ரக ஆடைகள். ஏனென்றால் சில பெண்கள் உடலை மறக்க ஆடை அணிகின்றோம் என்று சொல்லிக் கொண்டு அதனைக் காட்டி அணிந்து கொண்டிருக்கின்றனர். இதில் கவலை கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் மாற்றுமத சகோதரிகள் மாத்திரமல்ல எமது சகோதரிகள் சிலரும் இவ்வாறுதான் நடந்துகொண்டிருக்கின்றனர்.
அவ்வாறெனில், இவர்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும். உடலைக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்ததன் பின்னர் ஏன் அதிகளவு விலைகொடுத்து அறைகுறை ஆடம்பர ஆடைகளை வாங்க வேண்டும்? சிந்திக்க வேண்டும் சகோதரிகளே!
நாம் மாற்று மதத்தவர்கள் போல பல தெய்வக் கொள்கை கொண்டவர்கள் அல்லர். அண்ட சராசரங்களையும் படைத்த ஒரே ஒரு இறைவனான அல்லாஹ்வை வணங்கக் கூடிய தூய இஸ்லாம் மார்க்கத்தில் இருப்பவர்கள். இது எமது நாவில் மாத்திரம் இருக்கக்கூடாது. நமது சொல், செயல்,அங்கீகாரம் அனைத்திலும் காணப்பட வேண்டும். அவ்வாறாக இருந்தால் இன்றைய இஸ்லாம் பெண்களின் ஆடை அலங்காரங்களில் எத்தகைய குறைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு எத்தகைய தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி சற்று நோக்குவோம்.
இன்றைய இஸ்லாமியப் பெண்கள் ஆடை அணிகின்றனர்தான். ஆனால், அந்த ஆடை இஸ்லாம் கூறும் வரையறைக்குள் அடங்குகின்றதா என்றால் இல்லை. உடலுடன் ஒட்டிய மெல்லிய இறுக்கமான ஆடைகளை அணிந்து பாதையில் செல்கின்றனர். அவர்களின் அங்கங்களின் அமைப்பு அப்படியே தெரிகின்றது. உண்மையில் அவர்கள் ஆடை அணிகின்றனரா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு அவர்களின் ஆடையின் விதம் அமைந்துள்ளது.
இதற்கு உதாரணமாக இன்றைய இஸ்லாமிய பெண்களின் பலர் பரவலாக அணியும் “டெனிங்”, “டீசேர்ட்”என்பவற்றைக் குறிப்பிடலாம். இவர்கள் இவ்வாறான ஆடைகளை அணிந்துகொண்டு சும்மா சென்றாலும் பரவாயில்லை. எவ்வளவு தைரியமாக சிறிய “ஹிஜாப்” ஒன்றை கழுத்துக்குக் கட்டிக்கொண்டு பிரதானமாக மறைக்க வேண்டிய பகுதிகளைக் காட்டிக்கொண்டு எமது மார்க்கத்தையே சீரழிக்கின்றனர்.
இவ்வாறான பெண்களைத் தலை நகரில் அதிகளவில் காணலாம். இதைப் பற்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்றே குறிப்பிட்டுச் சென்றார்கள்.
“எனது சமூகத்தில் பிந்திய காலகட்டங்களில் பெண்கள் ஆடை அணிந்தும் (உண்மையில்) நிர்வாணமாக இருப்பர். அவர்களைச் சபியுங்கள். நிச்சயமாக அவர்கள் சபிக்கப்பட வேண்டியவர்களே!”
ஆதாரம் : அல்முஜாம் அஸ்ஸகிர்
அறிவிப்பாளர் : அத்தபரானி
இவை மாத்திரமன்றி, சில சகோதரிகள் தமது கூந்தலை எந்தெந்த அலங்காரங்கள் செய்து அழகாக்க முடியுமோ அவ்வாறெல்லாம் அலங்கரித்துக் கொண்டு பாதையிலும், மஹ்ரமல்லாத ஆடவர்கள் மத்தியிலும் அலைந்து திரிகின்றனர். சிலர் தமது சிகையைத் தூக்கிக் திமில் போல் உயர்த்திக் கட்டிக்கொண்டு, இதன் பின் விளைவுகளால் ஏற்படும் வேதனைகளை அறியாமல் ஆடிப்பாடுகின்றனர்.இவர்களை அல்லாஹ் சபிக்கின்றான் என்பதை இவர்கள் அறிவதில்லை.
மேலே கூறிய ஹதீஸின் தொடரைச் சற்றுக் கவனியுங்கள.
“அவர்களின் தலைகளின் மேல் திமில் போன்றவை (தலைமுடி) வைக்கப்பட்டு இருக்கும். அவர்களையும் சபியுங்கள். நிச்சயமாக அவர்கள் சபிக்கப்பட வேண்டியவர்களே!”
மேற்படி நபிமொழியானது இவ்வாறான சிகை அலங்காரம் மேற்கொள்ளும் நமது இஸ்லாமிய சகோதரிகளுக்கு சவுக்கடியாய் அமைந்திருக்கும். இப்படி சிகை அலங்காரம் செய்து கொள்ளும் பெண்கள் தன் தலையை மறைக்க வேண்டும் என்று விரும்புவ தில்லை. மறைக்கும் தலைக்கு விதவிதமான அலங்காரங்கள் எதற்கு?
நமது இஸ்லாமியப் பெண்களிடம் இருக்கும் இன்னுமொரு குறைபாடு வெளியே செல்லும்போதும்,டியூசன், பாடசாலை என்று செல்லும்போதும் தமது மேனியில் நறுமணம் பூசி வருவதாகும். இது அதிகமாக டியூசன் செல்லும் இளம் நங்கைகளின் பழக்கத்தில் உள்ளது. இவ்வாறான செயல் தவிர்க்கப்பட வேண்டும். இதனை நம் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறுத்தொதுக்கியுள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுறுத் துகின்றது.
“ஒரு பெண் மணம் பூசி அதன் நறுமணத்தை மக்கள் நுகரும் வகையில் அவர்களைக் கடந்து செல்வாளாயின் அவள் ஒரு விபச்சாரியாவாள்“.
ஆதாரம் : அந்நஸஈ
அல்லாஹ் எம்மையும், உம்மையும் பாதுகாப்பானாக! இதனை அறிந்தோ அறியாமலோ சிலர் இவற்றை பழக்கமாக்கியுள்ளனர் என்பது மிகவும் துன்பகரமான விடயமாகும்.
மேலே கூறியவை ஒருபுறமிருக்க, இவர்களை விடவும் மிக மோசமானவர்கள்தான் இன்று “ஹபாயா“அணிந்து செல்லும் சில பெண்கள், ஏன் என்கிறீர்களா? இவர்கள் தாம் ஹபாயா அணியும் நோக்கத்தை மறந்து செயற்படுகின்றனர். ஏனெனில், இறும் சில சகோதரிகள் ஹபாயாவை அணிந்துகொண்டு தலையை மறைத்து ஒரு (ஹிஜாப் அல்லது பர்தா) அணியாமல் New Fasion என்று சொல்லிக்கொண்டு சோல் அணிகின்றார்கள். இங்கு அவர்களது மறைக்கப்பட வேண்டிய தலைமுடி மற்றும் தாம் அணியும் ஆபரணங்கள் அனைத்தும் கவர்ச்சியாக வெளியில் தெரிகின்றன. இது இஸ்லாமிய சட்டவிதி முறையை குழிதோண்டிப் புதைப்பதாகவே அமைகின்றது.
இவை மட்டுமல்லாது இன்னும் சிலர் Open ஹபாயா என்று சொல்லிக்கொண்டு இரண்டு பக்கங்களாலும் கிழித்துக்கொண்டும், கணுக்கால் வெளியே தெரியக் கூடியவாறு கட்டையாகவும் அணிகின்றனர்.இவ்வாறான சகோதரிகள் பின்வரும் ஹதீஸைப் படித்தாவது தம்மைத் திருத்திக் கொள்ளட்டும்.
“பெண்கள் தமது ஆடையை கெண்டைக் காலிலிருந்து ஒரு ஜான் கீழே தொங்கவிட்டுக் கொள்ளட்டும்” என நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதும். “அவர்களின் பாதங்கள் இந்த நிலையில் தெளிவாகத் தெரியுமே” என உம்மு ஸல்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்டார்கள். “அப்படியானால் ஒரு முழம் தொங்க விட்டுக் கொள்ளட்டும்“ என்றார்கள் நபியவர்கள்.
அன்புச் சகோதரிகளே சிந்தித்துப் பாருங்கள். பெண்களின் கால் பாதத்தைக் கூட வெளியே காட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பது தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.
இவ்வாறான இஸ்லாமிய சகோதரிகளின் ஒழுக்கச் சீரழிவிற்கான காரணம் என்னவென நாம் நோக்குமிடத்து முதலாவது காரணம் இஸ்லாமிய சட்ட விதிமுறைகளை இவர்கள் அறியாமல் இருப்பதேயாகும். எனவே அதைப்பற்றி சற்று சுருங்க நோக்குவோம்.
இஸ்லாம் பெண்களின் ஆடை விஷயத்தில் தனது வரையறையை பின்வருமாறு முன்வைக்கின்றது. “அவ்ரத்தை மறைக்கக்கூடிய உடைகளையே ஆண், பெண் இரு பாலாரும் அணிய வேண்டும். குறிப்பாக பெண்கள் தமது முகத்தையும், இரு மணிக்கரங்களையும் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளையும் மறைப்பது பர்ழாகும்”.
இதனை பின்வரும் ஹதீஸ் இன்னும் துல்லியமாக விளக்குகின்றது. “ஓ அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்துவிட்டாளேயானால் அவள் (நாயகமவர்கள் தமது முகத்தையும், மணிக்கரத்தையும் சுட்டிக்காட்டி) இவற்றைத் தவிர தம் உடலின் எந்தவொரு பாகத்தையும் அந்நிய ஆடவர் முன் திறந்துகாட்ட அனுமதி இல்லை”. ஆதாரம்: அபுதாவூத். இதுதான் எம் மார்க்கம் கூறும் நேரிய வழியாகும்.
அடுத்து, அல்லாஹுத்தஆலா ஆடைகளை வழங்கியதற்கு கூறும் முதற்காரணம் “மானத்தை மறைப்பதற்கு”என்பதாகும். அந்த வகையில் மானத்தை மறைப்பது தொடர்பாக இஸ்லாம் வகுத்துள்ள ஒழுங்கு முறைகளைக் கவனிப்போம்.
01. காட்சிப் பொருளாக ஆடை அமைதல் கூடாது -
இது ஆண்களின் பார்வையை கவர்ந்திழுப்பதாக இருத்தல் கூடாது. சிலர் தாம் அணியும் ஆடைகளை பல வேலைப்பாடுகளும், வண்ண வடிவங்கள் கொண்டதாகவும் வைத்துக் கொள்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
02. மெல்லிய ஆடை கூடாது -
அதாவது, உடலின் நிறம், அமைப்பு, அழகு, எழில் என்பவற்றை வெளிக்காட்டாத சற்று கணமான ஆடை அணிதல் அவசியம்.
03. இறுக்கமான ஆடை கூடாது -
இறுக்கமான ஆடை அணியும்போது “உடலின் வடிவம் இதுவே” என்று உரித்துக் காட்டுவதாக அமையும்.ஆகவே இதன் மூலம் பல துன்பகரமான நிகழ்வுகள் ஏற்படலாம்.
04. ஆடைகளில் மணம் பூசுதல் கூடாது -
இது மிகவும் கொடூரமான வெறுக்கத்தக்க செயலாகும். ஒரு பெண் தன் கணவன் அனு மதியுடன் அவருக்கு மாத்திரம் மணம் பூசிக்கொள்ளலாம். மாறாக வேறு சந்தர்ப்பத்தில் இது பெரும் பாவமாகும்.
05. ஆணைப்போல் பெண்ணும், பெண்ணைப்போல் ஆணும் -
“ஆண்களைப்போல் உடை அணியும் பெண்ணும், பெண்களைப் போன்று உடை அணியும் ஆண்களும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர்”.
ஹிஜாப்:அதன் அவசியம் என்ன? ப - 40
06. பிற மத அடையாளங்களைக் காட்டும் ஆடை அணிதல் கூடாது.
“எவன் எந்த சமுதாயத்திற்கு ஒப்பானவனாக (தனது நடை, உடை, பாவனைகளில்) இருக்கின்றானோ அவன் அவர்களைச் சேர்ந்தவனாவான்.
ஆதாரம்: அபூதாவூத்
இவ்வாறான இஸ்லாம் பெண்களுக்கு ஆடை தொடர்பான பல விதிமுறைகளை விதித்துள்ளது. அதனை ஏற்று நடப்பது கடமையாகும். மீறி நடந்தால் இறைவனின்சாபத்திற்கும் கொடிய தண்டனைக்கும், ஆளாக நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்து, இவ்வாறு எமது சில இஸ்லாமிய பெண்கள் நடந்து கொள்வதற்கு அவர்களிடம் “ஹயா” என்ற வெட்க உணர்வு அற்றுப் போயிருப்பதே காரணமாகும். அக்கால ஸஹாபாப் பெண்மணிகளின் இயல்பில் ஒரு துளிகூட இன்றைய பல பெண்களிடம் காணக்கிடைக் கவில்லை. நீரும் நெருப்பும் எவ்வாறு ஒன்று சேராதோ அதுபோன்றே அக்கால ஸஹாபா பெண்மணிகளினதும் இக்கால பெண்களுடைய விந்தையான செயல்களும் ஒன்று சேராது. இத்தனைக்கும் மத்தியில் இஸ்லாமிய தீபச் சுடரை தம் வாழ்வில் ஏற்று நடக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
இது இவ்வாறு இருக்க இன்று புதுப்புது வடிவங்களில், பெஷன்களில் ஆடைகளை சந்தையில் மலிந்துள்ளன. இவற்றை அணிவதில் நமது முஸ்லிம் பெண்களிடத்தில் பேரார்வம் மிகைத்துள்ளன.இவ்வாறில்லாமல் எமது சகோதரிகள் தமது ஆசையையும், மோகத்தையும் கட்டுப்படுத்தி நம்மை ஆசை ஆட்கொள்ளாமல் நாம் ஆசைகளை ஆளக்கூடியவர்களாக மாற வேண்டும். அப்போது இன்று உலகில் பெண்களுக்கிருக்கின்ற அந்தஸ்தைவிட உயரிய அந்தஸ்த்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இஸ்லாம், ஒரு குறிப்பிட்ட ஆடை அலங்காரத்தை கூறவில்லை. தமது தேவைகளுக்கேற்ப சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு ஷரீஅத்தின் விதிக்குட்பட்டு ஆடை அணிவதற்கு ஷரீஅத் அனுமதி அளி்க்கிறது. ஆனால் இவ்வாறு கூறும் வரையறைக்குள் நமது ஆடை அமைந்திருக்க வேண்டும். இதுவே வெற்றிக்கு வழகோலும். ஆம் நிரந்தர வெற்றிக்குஇஸ்லாத்திடமே தீர்வு உள்ளது என்பது வெள்ளிடை மலை.
அல்ஹம்துலில்லாஹ்...
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !