நேர்காணல்: ஏ.ஆர்.ஏ.பரீல், எஸ்.என்.எம்.ஸுஹைல்
கல்வி அமைச்சின் திட்டமிடல் கிளையின் தரவு முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றும் எம்.டி.எம்.அக்கில் வெலிகமையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வெலிகம அரபா மத்திய வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் முதலில் மாத்தறை தாருல் உலூம் வித்தியாலயத்தில் ஆசிரியராக இணைந்தார்.
2007ஆம் ஆண்டு இலங்கை கல்விச் சேவை (SLES) பரீட்சையில் சித்தியடைந்து தெனியாய வலயக்கல்விக் காரியாலயத்தில் திட்டமிடல் பிரிவின் அதிகாரியாக நியமனம் பெற்றார்.
இலங்கை கல்விச் சேவை பரீட்சை தமிழ்மொழியில் திட்டமிடல் பாடத்தில் ஆகக்கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்டதால் கல்வி அமைச்சின் திட்டமிடல் கிளையில் உதவிப்பணிப்பாளராக 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.
கேள்வி: புதிய கல்விச் சீர்திருத்தச் சட்டமொன்று அமுலுக்கு வரவுள்ளது. இச்சட்டம் தொடர்பில் முஸ்லிம் சமூகம் தெளிவு பெற்றுள்ளதா?
பதில்: இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தச் சட்டம் கட்டாயமாக அமுல் நடத்தப்பட வேண்டும். பல மாற்றங்கள் அதில் இடம்பெறவேண்டும். என்ற இறுதியான நிலைப்பாட்டுக்கு அரசு வந்துள்ளது. அதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு அதன் பிரதிகளும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முஸ்லிம்கள் இதில் கரிசனை காட்டுவதாக தெரியவில்லை.
கல்விச் சீர்திருத்த சட்டம் தொடர்பாக கேள்விக் கொத்தொன்று அமைச்சினால் எமக்குத் தரப்பட்டது. நான் மாத்தறை மாவட்டத்தில் அதிபர்கள், கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள் என்று 60க்கும் மேற்பட்டோருக்கு கலந்துரையாடல் ஒன்றுக்காக அழைப்பு விடுத்தேன். ஆனால் 60பேரில் 10 பேரே வருகை தந்திருந்தனர். அவர்களுடன் ஒரு முறை கலந்துரையாடலை மேற்கொள்ள முடிந்தது. அதன்பின் அவர்கள் இதில் ஆர்வம் செலுத்தவில்லை. முஸ்லிம்கள் புதிய கல்விச் சட்டம் தொடர்பில் மேலோட்டமாகவே பேசிவருகிறார்கள்.
முஸ்லிம் கல்வி மாநாடு அது தொடர்பில் எந்தளவுக்கு செயற்படுகிறது. முஸ்லிம் கல்வி அதிகாரிகள் புதிய கல்விச் சீர்திருத்த சட்டம் தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து கருத்துக்களை முன்வைக்கிறார்களா? என்ற கேள்விகளை எமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயன்ந் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருவரும் இணைந்து முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை தொடர்பாக ஆராய ஒரு குழுவை நியமித்தனர். குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது. அது நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை இருக்கிறது. இதற்கு முஸ்லிம் சமூகம்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் பிரிவெனா கல்வி முறைக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. அரசாங்கத்தினால் சீருடை, புத்தகங்கள் என்பன பிரிவெனாக்களுக்கு வழங்கப்படுகின்றன. பிரிவெனா கல்வி முறைக்குள் எமது மத்ரஸாக்களையும் உள்வாங்க ஏற்பாடுகளைச் செய்யலாம். ஆனால் இது தொடர்பில் எமது சமூகம் மௌனமாகவே இருக்கிறது.
மத்ரஸாக்களில் இருந்து வெளியேறும் மௌலவிகளுக்கு தொழில் இல்லை என்று உலமாக்கள் கவலையுடன் பேசுகிறார்கள். ஆனால் கல்விச் சட்டத்துக்குள் மத்ரஸாக்களை இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாகத் தெரியவில்லை.
கேள்வி: 1000 பாடசாலைகள் அபிவிருத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பாடசாலைகள் எந்த தகைமைகளின் கீழ் தெரிவுசெய்யப்பட்டுள்ளன?
பதில்:உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள 1000 பாடசாலைகளின் விபரங்கள் இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. தெரிவு செய்யப்படும் பாடசாலைகள் தரம் நோக்கி தெரிவு செய்யப்படுவதில்லை. அபிவிருத்தி செய்யக்கூடிய இடவசதிகள் உள்ள மத்திய நிலையமாக இயங்கக்கூடிய பாடசாலைகளே இத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படும்.
பாடசாலையின் புவியியல் நிலை வீதிக் கட்டமைப்பு என்பனவும் கவனத்திற் கொள்ளப்படும். தெரிவு செய்யப்படும் பாடசாலையின் 3முதல் 5கிலோ மீற்றர் தூரத்துக்குள் போஷணை செய்யக்கூடிய ஆரம்பப்பாடசாலைகள் இருக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை 3-5 க்குள் அமைய வேண்டும்.
தரம்1 முதல் 13 வரையிலான வகுப்புகள் உள்ள ஒரு பாடசாலை தெரிவுசெய்யப்பட்டால் அப்பாடசாலையின் தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் தனியாக வேறு படுத்தப்பட்டு தனி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும். இப்பிரிவு 1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படமாட்டாது.
கல்வி அமைச்சர், நாட்டிலுள்ள சகல தேசிய பாடசாலைகளும் 1000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால் தேசிய பாடசாலைகள் அனைத்தும் இக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ரோயல் கல்லூரி போன்ற சுயமாக முன்னேறும் கல்லூரிகள் இத்திட்டத்திற்குள் வருவதை விரும்பவில்லை. கல்வி அமைச்சு மாகாண கல்வித் திணைக்களம் ஊடாக தேசிய பாடசாலைகளின் விருப்பத்தைக் கோரியுள்ளது.
பாடசாலைகளை தெரிவு செய்யும் பொறுப்பு மாகாண ரீதியில் மாகாணக் கல்வி அமைச்சுக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. கலாசாரத்துக்கு மதிப்பளித்து மொழி ரீதியாக பாடசாலைகள் தெரிவு இடம்பெறும். மாகாண மட்டத்தில் பாடசாலைகள் தெரிவு பூர்த்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடசாலைகளின் விபரங்களை தற்போது எம்மால் வெளியிட முடியாது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்வித் திணைக்கள திட்டமிடல் பிரிவு என்பவற்றின் வழிகாட்டலின் கீழ் தேசிய கொள்கை மற்றும் வரையறைகளுக்குட்பட்டு மனச்சாட்சிக்கு விரோதமற்ற நிலையில் பாடசாலை தெரிவு இடம்பெறவேண்டும் என்று கல்வி அமைச்சு சுற்றுநிருபம் மூலம் மாகாணகல்வித்திணைக்களங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கான உலக வங்கியின் நிதியுதவி (5 வருட திட்டம்) அடுத்த வருடம் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும். எனவே, இப்பாடசாலை அபிவிருத்தி திட்டம் அடுத்த வருடம் ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கப்படும்.
கேள்வி: ஒரு பாடசாலையுடன் அருகிலிருக்கும் ஏனைய பாடசாலைகள் இணைக்கப்படும் போது கலாசார வேறுபாடுகளினால் பாதிப்புகள் ஏற்படலாமல்லவா?
பதில்:இந்த திட்டத்தினூடாக பாடசாலைகள் மொழி ரீதியாகவே இயங்கும். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மொழிப் பாடசாலைகளில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ போன்ற கலாசாரத்தை பேனுபவர்கள் ஒரே பாடசாலையில் கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இந்த திட்டம் இன, மத, கலாசார வேறுபாடுகள் எதுவும் பார்க்காமல் மேற்கொள்ளப்படுகின்றது.
தமது கலாசார பாதிப்புக்கள் தொடர்ப்பில் முஸ்லிம் அதிகாரிகள், அரசியல் தலைமைகள் மற்றும் உலமாக்கள்கல்வி அமைச்சை தெளிவுபடுத்த வேண்டும்.
முஸ்லிம்கள் எதிலும் தாமதமாகவே செயற்படுகிறவர்கள். இத்திட்டத்தின் ஆரம்ப ஏற்பாடுகளின் போது முஸ்லிம் அமைச்சர்களோ புத்திஜீவிகளோ கரிசனை காட்டவில்லை. தற்போது தான் சிறிது விழிப்படைந்திருக்கிறார்கள்.
முன்பு ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சராக இருந்த போது கல்வி வெள்ளையறிக்கையொன்றினை அமுல்படுத்தினார். இதன் கீழ் கொத்தணி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறுசிறு பாடசாலைகள் ஒன்றிணைக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் போதும் முஸ்லிம்கள் கரிசனை காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கேள்வி: கிழக்கு மாகாணம் உட்பட பெரும்பாலான முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் அதேவேளை ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ள பாடசாலைகளும் அதிகம் காணப்படுகின்றன. அல்லவா? இந்நிலை சமப்படுத்தப்படலாம் அல்லமா?
பதில்:இடமாற்றங்கள் மூலமே இதனைச் சமப்படுத்த முடியும். எமது நாட்டில் தேசிய பாடசாலைகள் மாகாண பாடசாலைகள் என்றிருக்கின்றன. இடமாற்றங்கள் தேசிய பாடசாலைகள் மாகாண பாடசாலைகள் என வெவ்வேறாகவே இடம்பெறுகின்றன. மாகாண பாடசாலைகளிலே ஆசிரியர்கள்சமனற்ற நிலைமை காணப்படுகின்றது.
கஷ்டப் பிரதேசங்களுக்கென்று நியமனம் பெற்றுக் கொள்ளும் ஆசிரியர்கள் அங்கு கடமையாற்ற விரும்புவதில்லை. கஷ்டப் பிரதேச பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டால் அரசியல்வாதிகள் உதவியால் அதனை ரத்துச் செய்து கொள்கிறார்கள். இடமாற்றக் கொள்கையை அமுல் நடத்துவதில் தலையீடுகள் இருக்கின்றமையே இதற்குக் காரணம். முதலில் ஆசிரியர்கள் சமூகம் சார்ந்த நல்ல சிந்தனைகளைப் பெற்று சமூகத்துக்கு சேவை செய்ய முன்வரவேண்டும்.
கேள்வி: உங்கள் பார்வையில் முஸ்லிம்களின் கல்விநிலை எந்தளவில் இருக்கிறது?
பதில்:கவலையாக இருக்கிறது. எம்மவர்கள் எமது பெற்றோர் முதலில் தாம் எந்தப் பாடசாலையில் தமது பிள்ளைகளை சேர்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். முஸ்லிம் பாடசாலைகளிலா? அல்லது ஏனைய சமூக பாடசாலைகளிலா? தமக்கு அருகில் ஒரு முஸ்லிம் பாடசாலை இருந்தாலும் தூரத்திலுள்ள ஏனைய சமூக பாடசாலைகளையே பெற்றோர்கள் தெரிவு செய்கிறார்கள். அங்கே ஒழுக்கம் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் கல்வி முஸ்லிம் பாடசாலைகளில் இல்லை. ஒழுக்கம் கட்டுப்பாடு என்பன எமது பாடசாலைகளில் கண்டிப்பாக பேணப்படுவதில்லை. எனவே இது தொடர்பில் சமூகம் சிந்திக்க வேண்டும்.
எதனையும் முஸ்லிம் சமூகம் இலகுவாக அடைந்து கொள்ளவே விரும்புகிறது. சர்வதேச பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்த்து பெரும் தொகைப் பணத்தைச் செலவு செய்கிறார்கள். இதேவேளை அரச பாடசாலைகளுக்கு நிதிஉதவி செய்து அப்பாடசாலைகளை முன்னேற்றி தங்கள் பிள்ளைகளுக்கு அங்கு கல்வி வழங்க முன் வருவதில்லை. இது எமது சமூகத்தின் சுயநல நோக்கமாகும். சமூக நோக்கமின்மை வருந்தத்தக்கதாகும்.
கேள்வி: முஸ்லிம் சமூகம் கல்வியில் விழிப்படைய என்ன செய்யவேண்டும்?
பதில்:தியாகம் செய்ய வேண்டும். சமூகத்தை விழிப்படையச் செய்யவேண்டும். மகாத்மா காந்தி போன்று வீதி வீதியாகச் சென்று போதனைகள் செய்ய வேண்டும். தப்லீக் ஜமா அத்துகள் வீடு வீடாகச் சென்று சன்மார்க்க சேவை செய்வதுபோன்று கல்வித்துறை விழிப்பூட்டலும் முன்னெடுக்கப் பட வேண்டும். உலக கல்வி, மார்க்க கல்வி என்று எமது சமூகம் கல்வியை இரண்டாகப் பிரித்துப் பேசுகிறது. நோக்குகிறது. இதுவே எமது கல்வி வீழ்ச்சிக்கு காரணம். செல்வந்தர்கள் மத்ரஸாக்களுக்கும் பள்ளிவாசல்கள் நிறுவுவதற்கும் உதவி செய்கிறார்கள். இவற்றுக்கு உதவி செய்வதன் மூலமே நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கருதுகின்றார்கள். பாடசாலை கல்விக்கு உதவி செய்வதாக இல்லை.
கல்வி அமைச்சு மாகாண ரீதியில் அபிவிருத்தி செய்யவுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கையை பின்வருமாறு வகுத்துள்ளது. இத்தரவுகள் மாற்றங்களுக்குள்ளாகும் வாய்ப்புகளும் உள்ளன.
மேல் மாகாணம் 134
தென் மாகாணம் 110
மத்திய மாகாணம் 153
வடமாகாணம் 90
கிழக்கு மாகாணம் 103
வடமேல்மாகாணம் 127
வடமத்தியமாகாணம் 82
ஊவா மாகாணம் 88
சப்பிரகமுவ மாகாணம் 113
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !