எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: February 01, 2014

இறுதி இறைத்தூதரின் தியாக வாழ்க்கை

படைத்த இறைவன் அல்லாஹ்வுடைய மார்க்கமாகிய இஸ்லாமை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தி அதன் பால் அவர்களை அழைப்பதற்காக அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர் தான் முஹம்மது (ஸல்) அவர்கள், சத்திய மார்க்கத்தை மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கின்ற பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது முதல் சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்துள்ளார்கள். அவர்கள் வாழ்நாள் முழுக்க தியாகங்கள் நிறைந்ததாகவே இருந்தன. அவர்கள் தங்கள் சத்திய பிரச்சாரப் பணியைத் துவங்குகின்ற நேரத்தில் வாழ்ந்த மக்கள் எப்படிப்பட்ட பண்பாடுகளுடையவர்களாகவும், எப்படிப்பட்ட கலாச்சாரத்தையுடைவர்களாகவும் இருந்தார்கள் என்பதை நாம் திரும்பி பார்க்க வேண்டும். அப்போது தான் எப்படிப்பட்ட கொடிய குணம் கொண்ட மக்களை உலகம் போற்றும் உத்தமர்களாக மாற்றிக் காட்டினார்கள் என்பதை நம்மால் புரியமுடியும்.
காலம் காலமாக சிலை வழிபாட்டில் மூழ்கியிருந்த மக்கள் தாங்கள் கடவுள்களாக கருதி வந்த சிலைகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்கள் தங்களுடைய எந்த ஒரு செயலைத் துவங்குவதாக இருந்தாலும் அந்த சிலைகளிடத்தில் வேண்டுதல் புரிந்தே துவங்குவார்கள். கஃபாவை முழு நிர்வாணமாக வலம் வருவதை புண்ணியமாகக் கருதியவர்கள், அற்ப விஷயங்களுக்காக மிகப்பெரிய போரையே உருவாக்கக் கூடியவர்கள், பழிவாங்கும் குணம் கொண்டவர்கள், எந்தவிதமான சட்ட ஒழுங்குமில்லாமல் வாழ்ந்தவர்கள், குடி, விபச்சாரம் போன்ற பெரும் பாவங்களை துர்குணங்களை தங்கள் கலாச்சாரமாகக் கொண்டவர்கள்.
இப்படிப்பட்ட மனிதர்களை முற்றிலும் தனக்கு கட்டுப்படக் கூடியவர்களாகவும், தன் மீது அளவு கடந்த பாசத்தைப் பொழியக் கூடியவர்களாகவும்,
முழுக்க முழுக்க படைத்தவன் அல்லாஹ்வை நம்பி அவனை மட்டுமே, வணங்கக் கூடியவர்களாகவும் மாற்றி அமைப்பது எவ்வளவு பெரிய சவால்களைக் கொண்டது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் தூதர் அறிமுகப்படுத்திய ஓர் இறைக்கொள்கையையும் இறை நெறியையும் சாதாரணமாக ஏற்றுக் கொண்டிருப்பார்களா? வீதி வீதியாகச் சென்று குடும்பம் குடும்பமாக சந்தித்து மக்களே! நரக வேதனையிலிருந்து உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என இடைவிடாது அவர்கள் செய்த அழைப்புப் பணியையும் அந்த நேரத்தில் அவர்களை நோக்கி வந்த எதிர்ப்பு அலையையும், அதை அவர்கள் எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்ற மேனியைப் புல்லரிக்கவைக்கின்ற வரலாறுகளை இன்றைய தலைமுறையினர் படித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர். நபியின் நெருங்கிய உறவினரான அபூலஹ்ப் நபியின் நற்குணங்களை சிறிய பருவத்திலிருந்தே அறிந்திருந்தவர் ஆவார். நபியவர்கள் அவரை அல்லாஹ்வின்பால் அழைத்த போது எவ்வளவு கடினமான சொற்களால் விமர்சித்தார் என்ற நிகழ்ச்சியை திருக்குர்ஆன் மூலம் படிக்கின்ற போது நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு பெரிய சகிப்புத்தன்மையுடையவர்களாக இருந்திருப்பார்கள்? என்பதை வரலாற்றிலிருந்து நமது சந்ததிகளுக்கு போதிக்கக் கடமைப் பட்டுள்ளோம். படைத்த இறைவனின் வல்லமையையும், அவனது பண்புகளையும் புரிந்து, அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று அழைப்புக் கொடுத்த ஒரே காரணத்திற்காக, தான் பிறந்த மண்ணிலேயே நெருங்கிய உற்றார் உறவினர்களால் தாங்க முடியாத கொடுமைகள் மூலம் துன்புறுத்தப்பட்டார்கள், சொந்த ஊரிலேயே சொந்த பந்தங்களாலேயே சமூகப் பகிஷ்காரம் செய்யப்படுகிறார்கள். ஆபூதாலிப் கணவாயில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். எந்தவிதமான கொடுக்கல் வாங்கலும் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் முஹம்மதுடனும் அவருடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களுடனும் குறைஷிகளில் யாரும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சபதம் ஏற்று அதை செயல்படுத்திய காலத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக வேண்டி எவ்வளவு பெரிய தியாகத்தை சந்தித்திருப்பார்கள் என்பதை அவர்கள் மீது பற்று கொண்டவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தான் பிறந்து வளர்ந்த மண்ணிலே தன்னுடைய பிரச்சாரத்திற்குப் போதிய ஆதரவு கிடைக்காததால் அருகாமையிலுள்ள தாயிப் நகருக்குச் சென்று அங்குள்ள மக்களிடத்தில் தங்களின் பிரச்சாரத்திற்கு ஆதரவு கிடைக்கலாம் என அங்கு செல்கிறார்கள். ஆனால் அங்கோ அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக கடுமையாக தாக்கப்பட்டார்கள். சிறுவர்களை ஏவி விட்டு கல்லால் அடித்தார்கள். அல்லாஹ்வின் தூதருடைய உடலை இரத்தக் கறையாக்கினார்கள். அந்த நேரத்தில் அவர்கள் அல்லாஹ் விடத்தில் உள்ளம் உருகி முறையிட்ட பிரார்த்தனை வரலாற்றில் மிகமுக்கிய இடம் பிடித்துள்ளது. அது போன்று அவர்கள் வேதனையடைந்து வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பிரார்த்தித்திருக்க மாட்டார்கள். அவ்வளவு பெரிய கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இந்த நிகழ்வுகளை இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் ஈடுபடக் கூடியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சத்திய மார்க்கம் மக்களிடத்தில் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் மேற் கொண்ட தியாகங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அவர் செய்த மகத்தான அழைப்புப் பணியை, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அறிமுகப்படுத்துகின்ற பணியை நாம் செய்கின்றோமா என அந்த மாமனிதரை தங்கள் தலைவராகவும், அல்லாஹ்வின் தூதராகவும், தங்கள் வாழ்க்கையின் முன் மாதிரியாகவும் ஏற்றிருக்கின்ற ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபியவர்கள் மேற்கொண்ட மகத்தான பணியை உலகம் அழியும் நாள் வரை செய்து கொண்டே இருக்க வேண்டும் என நமக்கு, அவர்கள் கட்டளை இட்டுச் சென்றுள்ளார்களே! நம்மில் எத்தனை பேர் அவர்கள் செய்தது போன்ற பிரச்சாரத்தை செய்திருக்கின்றோம். அவர்கள் சந்தித்த தியாகங்களில் எதையாவது நாம் சந்தித் திருக்கின்றோமா? அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் கொண்டிருந்த கடவுள் கொள்கையைவிட மிகவும் மோசமானவிதத்தில் இன்றைய மனித சமுதாயம் கடவுளை சித்தரித்து வழிபட்டுக்கொண்டிருக்கின்றனரே! குறிப்பாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நாட்டில் கடவுளை கற்பனையாகச் சித்தரித்து, படைத்த இறைவனுக்கு கோபமூட்டுகின்ற மாபாதகச் செயல்களை கடவுளின் பெயரால் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனரே இப்படிப்பட்ட மனிதர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றி அறிமுகம் செய்து, அவர்களையும் நேர்வழிபடுத்தி, நரகத்திலிருந்து அவர்களை காப்பாற்றுகின்ற பொறுப்பு நம்மீது சுமத்தப்பட வில்லையா? அதைத்தானே அல்லாஹ்வின் தூதர் தமது 23 ஆண்டுகால வாழ்க்கையிலே மேற் கொண்டார்கள்.

ஆனால் இன்றைய இஸ்லாமிய சமுதாயம் அந்த மகத்தான பணியை மேற்கொள்வதற்கு பதிலாக நபிக்கு பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடி, சோறு சமைத்து, சாப்பிட்டு கழித்து விட்டால் அந்த நபியை முழுமையாகப் பின்பற்றிவிட்டதாகவும், அவர்கள் மீது முழு பாசம் வைத்தவர்களாகவும் ஆவோம் என நினைத்து மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இப்படிப்பட்டவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்