
‘(கூஃபாவின் ஆளுநர்) சஅத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்களைப் பற்றி கூஃபா வாசிகள் (சிலர்) உமர் (ரழி) அவர்களிடம் முறையிட்டனர். எனவே (அது குறித்து தீர விசாரித்து) உமர் (ரழி) அவர்கள், சஅத் (ரழி) அவர்களை (பதவியிலிருந்து) நீக்கிவிட்டு அம்மார் (ரழி) அவர்களை, அவர்களுக்கு அதிகாரியாக நியமித்தார்கள். சஅத் (ரழி) அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் முறையீடுகளில் ஒன்றாக இருந்தது. ஆகவே, உமர் (ரழி) அவர்கள் சஅத் (ரழி) அவர்களிடம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து, அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று இவர்கள் கூறுகின்றனரே (அது உண்மையா)? என்று கேட்டார்கள். அதற்கு அபூ இஸ்ஹாக் (சஅத் பின் அபீ வக்காஸ் ரழி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் அவர்களுக்குத் தொழுவித்து வந்தேன். அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிடவில்லை. நான் இஷாத் தொழுகை தொழுவிக்கும் போது முதல் இரண்டு ரக்அத்களில் நீளமாக ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன், என்று பதிலளித்தார்கள்.
அதற்கு உமர் (ரழி) அவர்கள், உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே என்று கூறினார்கள். இதையொட்டி உமர் (ரழி) அவர்கள், ஒருவரை அல்லது சிலரை, சஅத் (ரழி) அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பிவைத்து, சஅத் (ரழி) அவர்கள் குறித்து கூஃபா வாசிகளிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரிக்கச் சென்றவர் கூஃபா வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டார். (கூஃபாவிலிருந்த) ஒரு பள்ளிவாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத் (ரழி) அவர்களை மெச்சி நல்ல விதமாகவே கூறினர்.
இறுதியில் (பிரபல கைஸ் குலத்தின் பிரிவான) பனூ அப்ஸ் குலத்தாரிடம் அவர் விசாரித்தபோது அந்தக் குலத்தைச் சேர்ந்த ‘அபூ சஅதா’ எனும் குறிப்புப் பெயர் கொண்ட ‘உசாமா பின் கத்தாதா’ என்பவர் எழுந்து, எங்களிடம் நீங்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்: சஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப்பிரிவுடன் தாம் செல்லமாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிட மாட்டார். தீர்ப்பு அளிக்கும்போது நீதியுடன் நடக்கமாட்டார், என்று (குறை) கூறினார். இதைக் கேட்ட சஅத் (ரழி) அவர்கள், அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மூன்று பிரார்த்தனைகள் நான் செய்யப்போகிறேன், என்று கூறிவிட்டு, இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய அவருடைய குற்றச் சாட்டில்) பொய் சொல்லியிருந்தால், பகட்டுக்காகவும் புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறை கூற முன்வந்திருந்தால் அவருடைய வாழ் நாளை நீட்டி (அவரைத் தள்ளாமையில் வாட்டி) விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பின்னர் (சஅத் அவர்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனைகளுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக்கப்பட்டால், நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிபனாக இருக்கிறேன். சஅத் அவர்களின் பிரார்த்தனை என்னைப் பீடித்துவிட்டது என்று கூறுவார். அப்துல் மலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பின்னா(ளி)ல் அவரை நான் பார்த்திருக்கிறேன். முதுமையினால் அவரது புருவங்கள் அவரது கண்கள் மீது விழுந்துவிட்டிருந்தன. அவர் சாலைகளில் செல்லும் அடிமைப் பெண்களை கிள்ளி அவர்களைத் துன்புறுத்துவார்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-755)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !