எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: October 06, 2013

உளவியல் பேரறிஞர் சிக்மன்ட் பிராய்டு.




நான் இண்டஸ்ட்ரியல் எஞ்சினியரிங் படித்துக் கொண்டிருக்கும்போது எங்களுக்கு இண்டஸ்ட்ரியல் சைக்காலாஜி என்று ஒரு பேப்பர் இருந்தது. எனக்கு சிறுவயதிலிருந்தே சைக்காலாஜியில் ஒரு ஈர்ப்பும், ஆர்வமும் இருந்ததால் அந்த பாடத்தை சற்று முனைப்புடன் படித்தேன். மற்ற பாடங்களில் எல்லாம் சுமார்தான். ஒரு செமஸ்டர் தேர்வில் சிக்மன்ட் பிராய்டு கருத்துக்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக என இரண்டு மார்க் கேள்வி கேட்டிருந்தார்கள். அதாவது ஷார்ட் நோட்ஸ். எனக்கு பிராய்டு பற்றி நன்றாக தெரிந்திருந்ததால், ஒரு பக்கம் முழுவதும் எழுதித் தள்ளி விட்டேன். அப்பாடத்தின் ப்ரொபசர் என்னைக் கூப்பிட்டு ஒரு அதட்டு அதட்டி விட்டு, நான் எழுதிய பதிலுக்கு இரண்டு மார்க் மட்டும் போட்டு அனுப்பினார்.


உளவியல் சரித்திரத்தில் பேரறிஞர் என்ற சொல்லுக்கு மிகப் பொருத்தமானவர் சிக்மன்ட் பிராய்டு ஆவார். ஆனால் இக்காலத்தில் பலரை பேரறிஞர் என்று கூறிக்கொள்கிறார்கள். கனவுகள், கனவுகளுக்கும் காம உணர்வுக்கும் உள்ள தொடர்பு, குழந்தைப் பருவ அனுபவங்கள் எவ்வாறு ஒரு மனிதனின் ஆளுமை (பெர்சனாலிட்டி) உருவாக்கத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன, ஆழ்மனம், எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ், ஓடிபஸ் காம்ப்ளெக்ஸ் - இவை போன்ற முற்றிலும் எதிர்பாராத உண்மைகளை உலகிற்கு எடுத்துரைத்தார். மனோதத்துவ உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.


ஆழ்மனதில் ஒடுக்கப்பட்ட உணர்வுகள், எண்ணங்கள், ஆசைகள், அனுபவங்கள் இவையே மனநோய்க்கு காரணமாக அமைகின்றன என்றும்,
ஆளுமை உருவாக்கத்தில் முக்கிய தாக்கத்தை உண்டாக்குகின்றன என்றும் கூறினார். ஆழ்மனதில் மண்டிக்கிடக்கும் உணர்வுகள் பெரும்பாலும் பாலியல் உணர்வு சார்ந்தவை என்றும், அவை பெரும்பாலும் கனவின் மூலம் வெளிப்பட்டு நிறைவேற்றிக்கொள்ளப் படுகின்றன என்றும் கூறினார். பிராய்டு தன்னுடைய அனைத்து நூல்களிலும், பாலியல் உணர்வு என்ற சொல்லை உடலுறவு எனும் குறுகிய ஒரே பொருளில் மட்டும் கையாளவில்லை என்பது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு அம்சமாகும்.


ஆழ்மனதில் அமுக்கப்பட்ட அல்லது தானாக படிந்து கிடக்கும் - நிறைவேறாத / முறையற்ற / அறநெறிக்கு முரணான / சமுதாய கோட்பாடுகளுக்கு எதிரான ஆசைகளையும், அனுபவங்களையும் ஒருசில உத்திகள் மூலம் மனிதமனத்தில் இருந்து வெளிக்கொணர்ந்து அவற்றை முறையாக பைசல் செய்வதன் மூலம் மனநோய்களை தீர்க்க முடியும் என்று கூறினார். கூறியதோடல்லாமல், குணப்படுத்தியும் காட்டினார். இந்த உத்திக்கு பெயர் சைக்கோ அனாலிசிஸ். தமிழில் உளப்பகுப்பாய்வு. பிராய்டு எந்த ஒரு கருத்தையோ, கொள்கை முடிவையோ மேலோட்டமாகவோ கூறவில்லை. ஆழ்ந்த சிந்தனை மற்றும் நோயாளிகளிடம் தன் தொடர் ஆய்வுகளின் முடிவில்தான் தன் கருத்தை வெளியிட்டார்.


அக்காலத்தில் வாழ்ந்த உளவியல் மற்றும் தத்துவ துறையை சேர்ந்த சிந்தனாவாதிகள் பிராய்டின் கருத்துக்களை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்; முகம் சுளித்தனர்; கடும் எதிர்ப்பும் காட்டினர். ஆனால் பிராய்டு சற்றும் அசரவில்லை. தன் கொள்கைகளில் உறுதியாகவும், தான் கூறியவை உண்மைதான் என்பதிலும் தெளிவாக இருந்தார். ப்ராய்டை எதிர்த்தவர்கள் வீட்டிற்கு சென்று தனிமையில் பிராய்டு கூறியது உண்மையாகத்தான் இருக்குமோ என்று யோசிக்கவும் செய்தனர்.


உள்ளம் என்பதை எளிமையாக எல்லோரும் நினைத்த அக்காலத்தில், உள்ளம் என்பது ஓர் ஆழ்கடல் என்றும், உள்ளம் ஒரு சிக்கலான அமைப்பு என்றும், உள்ளக்கடலில் எழுந்து போராடும் உணர்வும் எண்ணிலடங்காதவை என்றும் தனது புரட்சிகரமான உண்மைகளை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைத்து உளவியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தை உருவாக்கியவர் சிக்மன்ட் பிராய்டு. ஆண்டுகள் செல்ல செல்ல, பிராய்டின் கருத்துகளில் உள்ள உண்மைக் கூறுகளை சிந்தனையாளர்களும் அறிஞர்களும் புரிந்துகொள்ள துவங்கினர். தற்போது அவரின் கருத்துக்களும், ஆய்வு முறைகளும் ஏற்கப்பட்டு சிற்சில மாற்றங்களோடு நடைமுறை செய்யப்பட்டுள்ளன. எல்லா மனநல மருத்துவ சிகிச்சை மற்றும் சோதனை முறைகளிலும் சைக்கோ அனாலிசிஸ் முறையானது ஓரளவு மறைமுகமாக பயன்பட்டே வருகிறது. தசாவதாரம் படத்தில் ஒரு பாடலில், ' விஞ்ஞானி ப்ராய்டையும் புரிந்து கொண்டாய்.....' என ஒரு வரியை வைரமுத்து எழுதியிருக்கிறார்.


மதிப்புமிக்க சிக்மன்ட் பிராய்டின் கருத்துக்கள், ஆய்வு முறைகள், கொள்கைகள் இவற்றை நான் விளங்கிக்கொண்ட வரையில் - சிறுசிறு கட்டுரைகளாக அவ்வப்போது எழுதி வெளியிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். ஏனெனில், ஒருவர் பிராய்டின் உளவியல் கருத்துக்களை தெளிவாக புரிந்துகொண்டால், அவ்வறிவு அவருக்கு தன் மனதை தானே செப்பனிட்டு - மனநலமும் உடல் நலமும் பெற உதவும். மகிழ்ச்சியான, அமைதியான வாழ்வைப் பெற உதவும். சமுதாயமும் ஓரளவு அமைதியாகும். தனது கடுமையான உழைப்பு, ஆய்வு, அர்பணிப்பு இவற்றின் மூலம் மனிதமனதின் ரகசியங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பேரறிஞர் சிக்மன்ட் ப்ராய்டிற்கு மனித சமுதாயம் எப்போதும் கடமைப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது....
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்