- அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே!
புனிதமான ரமழான் மாதம் எம்மை அடைந்திருக்கின்றது. இம்மாதத்தில் தான் முஸ்லிம்களில் அதிகமானோர் மார்க்கவிடயத்தில் கருத்துமுரண்பட்டுக்கொள்கின்றனர். பொதுவாக மனிதர்களுக்கு கருத்துமுரண்பாடுகள் ஏற்படுவது இயல்பானதே! ஆனால் கருத்துமுரண்பாடுகளுக்கு அவசியம் தீர்வுகாணப்படுதல் வேண்டும்.
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்தவரை மக்களுக்கு ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைச் சொல்லக்கூடிய தெளிவான ஒரு மார்க்கம். இதனை திருமறைக் குர்ஆன் மிக அழகாக எமக்கு விளக்குகின்றது.
ஏதேனும் ஒரு விசயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்’(04:59)
மேற்குறித்த இறைவாக்கிலிருந்து கருத்து முரண்பாடுகள் அனைத்திற்கும் இஸ்லாத்தில் தீர்வுகள் இல்லாமலில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். ரமளானுடைய காலம் வந்தால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய சர்ச்சையே தராவீஹ் தொழுகை பதினொரு ரக்அத்துக்களா? அல்லது இருபத்தி மூன்று ரக்அத்துக்களா? என்பதே!
மிக நீண்ட காலமாக முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்டுவரும் இச்சர்ச்சைக்கு பின்வரும் ஹதீஸ் அழகாகத் தீர்வு சொல்கின்றது.
அபூ ஸலாமா பின் அப்துர் ரஹ்மான்(ரஹ்) கூறியதாவது: நபி(ஸல்)அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன்.அதற்கு அவர்கள் ரமளானிலும்,ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினொரு ரக்அத்துக்களை விட அதிகமாக நபிகளார்(ஸல்)அவர்கள் தொழமாட்டார்கள்.(ஆதாரம்:ஸஹீஹ் அல்புஹாரி,ஹதீஸ் இல:2013)
மேற்குறித்த ஹதீஸிருந்து இரண்டு பாடங்களை நாம் பெறமுடியும்.
1. அல்லாஹ்வுடைய தூதர் இரவு நேரத்தொழுகையாகத் தொழுத தொழுகையின் மொத்த ரக்அத்துக்கள் 11 மட்டுமே. அதை விட ஒரு ரக்அத்தையும் அதிகரிக்கவில்லை.
2.அபூ ஸலமா (ரலி) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபிகளாரின் இராக்கால வணக்கம் எப்படி என்றே கேட்கின்றார்கள். அதற்கு ஆயிஷா(ரலி)அவர்களின் பதிலோ எப்படி என்றும் கூறி எத்தனை என்பதையும் சேர்த்தே கூறுகின்றார்கள்.
இது இன்னும் தராவீஹ் தொழுகையின் ரக்அத்துக்கள் 11 மாத்திரமே என்பதை எமக்கு மிகத் தெளிவாகச் சொல்கின்றது. இஸ்லாத்தில் சட்டங்கள் மிகத் தெளிவாக இருந்தும் மக்கள் அதில் அசமந்தப் போக்காக இருப்பது அவசியம் உணர்த்தப்பட வேண்டியதாகும்.
அல்லாஹ்வுடைய தூதர் இரவு வணக்கத்தை(தராவீஹை) 11 ரக்அத்துக்களாகத் தொழுதிருக்க இன்று பள்ளிவாயல்களிலும், வீடுகளிலும் இருபத்தி மூன்று ரக்அத்துக்கள் தொழவைக்கப்படும் அவலநிலையைக் கண்கூடாகக் கானுகின்றோம்.
இஸ்லாத்தில் எவ்வித ஆதாரமுமற்ற இந்த இருபத்தி மூன்று ரக்அத்துக்களுக்கு எவ்விதத்திலும் நாம் அங்கீகாரம் அளிக்கக் கூடாது. அல்லாஹ்வுடைய இம்மார்க்கத்தில் நபிகள் நாயகத்திற்குத் தெரியாத இந்த இருபத்தி மூன்று ரக்அத்துக்களை யார் கண்டுபிடித்தது?
அல்லாஹ்வுடைய தூதர்தான் மார்க்கத்தை எமக்குச் சொல்லித்தந்தவர்கள். அவர்கள் செய்யாத இக்காரியத்தை அல்லாஹ் எப்படி அங்கீகரிப்பான்? பூரணத்துவம் பெற்ற இம்மார்க்கத்தில் கூட்டல், குறைத்தல் செய்வதற்கு எவருக்கும் எந்த அருகதையும் கிடையாது.
அல்லாஹ்வுக்குச் சொந்தமான இம்மார்க்கத்தில் யாராவது புதிதாக ஒன்றை உருவாக்கினால் அது நிச்சயம் அங்கீகரிக்கப்படமாட்டாது. இதனை அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்)அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
யார் எங்களுடைய இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும்.(ஆதாரம்:ஸஹீஹ் அல்புஹாரி.ஹதீஸ் இல:2499)
அல்லாஹ்வுடைய தூதரின் வழிகாட்டுதல் இல்லாமல் செய்யப்படும் அத்துனை காரியங்களும் அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. எனவே அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆகிய இரு சட்ட மூலாதாரங்களிலின் வெளிச்சத்திலிருந்து நோக்குமிடத்து ‘தராவீஹ் 11 ரக்அத்துக்கள் மாத்திரமே என்பதையும் இருபத்தி மூன்று ரக்அத்துக்கள் அல்ல என்பதனையும், இருபத்தி மூன்று ரக்அத்துக்கள் தொழுவது வழிகேடு என்பதையும் புரிந்து கொள்ளலாம். இஸ்லாத்தில் மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்ட ‘பித்அத்’(நூதன அனுஷ்டானம்)இல்லாமல் வணக்கங்களை மேற்கொள்வதே ஒரு இறைவிசுவாசிக்கு அழகானதும், அறிவுபூர்வமானதுமாகும்.
அதை விட்டு விட்டு பெரியார்கள்,நதாக்கள், செய்குமார்கள், உலமாக்கள் செய்கின்றார்கள் என்பது சத்தியத்தின் அளவுகோல் அல்ல.சத்தியத்தின் அளவுகோல் அல்குர்ஆனும், நபிகளாரின் வாழ்வுமே! இரண்டு சட்டமூலாதாரங்களிலும் இல்லாத அத்தனை அனுஷ்டானங்களும் சுத்தமான வழிகேடுகள் என்பதை நாம் அனைவர்களும் மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
நாளை மறுமை நாளையில் அல்லாஹ்வின் சந்திதானத்திற்கு முன்னால் நிறுத்தப்படும் அந்நேரத்தை நாம் அனைவர்களும் அஞ்சிக்கொள்ள வேண்டும்.
அன்புக்குரியவர்களே!
தராவீஹ் தொழுகையை இருபத்தி மூன்று என்று சொல்லக்கூடியவர்கள் சில ஆதாரங்களை(?)முன்வைத்து வருகின்றனர்.அவற்றை நாம் மீளாய்வுக்கு இங்கு உட்படுத்துகின்றோம்.
1.கேள்வி: உமர்(ரலி) அவர்களி ஆட்சிக்காலத்தில் தராவீஹ் தொழுகை இருபத்தி மூன்று ரக்அத்துக்கள் தொழவைக்கப்பட்டதாக ஆலிம்கள் சொல்கின்றார்களே! இது பற்றி தாங்கள்….?
பதில்: மேற்குறித்த தகவல் ஆதாரமற்ற தகவலாகும். இத்தகவலை அறிவிக்கும் யஸீத் என்பவர் உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலட்தில் வாழாதவர். (ஆதாரம்:நஸ்புர் ராயாஃ 154ம் பக்கம்)உமர்(ரலி)அவர்களின் காலத்தில் வாழாத இந்நபர் எப்படி உமரின்(ரலி) ஆட்சிக்காலத்தோடு தொடர்பான செய்தியை அறிவிக்க முடியும்? அதேபோன்று ஒருவரின் காலத்தில் நடப்பது எவ்விதத்தில் மார்க்கத்தில் ஆதாரமாக அமையாது. இருபத்தி மூன்று ரக்அத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டப்படும் இச்சம்பவத்தில் நேரடியாக உமர்(ரலி)அவர்கள் கூட சம்பந்தப்படவில்லை.மேற்குறித்த அடிப்படைகளை நுணுக்கமாகக் கவனிக்கும் எவரும் இத்தகவலை ஆதாரமாகக் கொள்ளமாட்டார்.
2.கேள்வி: புனித கஃபதுல்லாஹ் அமைந்திருக்கும் மக்காப்பள்ளி வாயலிலேயே இருபத்தி மூன்று தானே தொழவைக்கின்றனர். இதனை ஆதாரமாக ஏன் கொள்ளக்கூடாது?
பதில்: கஃபத்துல்லாஹ் புனிதமானது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்துக் கிடையாது. ஆனால் அங்கு நடைபெரும் அனைத்துக் காரியங்களும் இஸ்லாத்தின் வரம்புகளுக்கு உட்பட்டவைகள் தான் என்று வாதிடவும் முடியாது. யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் அது அமைந்திருக்கின்றதோ அதற்கேற்றால் போல் அங்கு வணக்க வழிபாடுகளும் நடைபெரும். முன்பொரு காலத்தில் கப்ருவணங்கிகள் ஸஊதியை தங்களது ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருந்த போது அங்கு மத்ஹபுக்காக பல்வேறு சண்டைகள், சச்சரவுக்ள் இடம்பெற்றிருந்தன.இதனை மேற்கோள்காட்டி கப்ருவணக்கத்தை யாரும் நியாயப்படுத்த முடியாது.
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே!
தராவீஹ் 11 ரக்அத்துக்கள் என்பது தான் சத்தியம். இருபத்தி மூன்று ரக்அத்துக்கள் என்பதற்கு எள்முனையளவும் எந்த ஆதாரமும் கிடையாது. பள்ளிவாயல்களிலும்,வீடுகளிலும் 23 ரக்அத்துக்கள் தொழவைப்பதைக் கண்டு மார்க்க அறிஞர்கள் மௌனமாக இருப்பது அல்லாஹ்வின் கொள்கைக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரும் மோசடியாகும்.
சத்தியத்தை மறைப்பதை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கண்டிக்கின்றது
மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கின்றான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்’(02:159)
உண்மையை மறைத்தவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்கு உரியவர்களாக மாறிவிடுவார்கள். (நம் அனைவர்களையும் அல்லாஹ் அவனது சாபத்திலிருந்து காப்பானாக!) ரமளான் காலத்தில் அதிக சர்ச்சைகக்கு உள்ளாகும் இந்தத் தராவீஹ் விடயத்தில் நமது நிலைப்பாடு மிகத்தெளிவானதே! தராவீஹ் தொழுகை இருபத்தி மூன்று ரக்அத்துக்கள் என்பதற்கு ஆதாரபூர்வமான ஹதீஸ் உண்டு எனக் கூறக்கூடியவர்கள் எம்மைத் தொடர்புகொண்டு ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் பகிரங்கமாக நமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வோம்.
அதை விட்டு விட்டு ’11க்குத் தான் ஆதாரமுண்டு, ஆனால் இருபத்தி மூன்றுக்கும் ஆதாரம் இல்லாமலில்லை’ எனக்கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம்?
எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாகவும்,அசத்தியத்தை அசத்தியமாகவும் காட்டி அவனது தீனை முழுமையாகப் பின்பற்றிய நல்லடியார்களாக எம்மனைவர்களையும் ஆக்கியருள்வானாக!