1428 ஆண்டுகளுக்கு முன்னர் அறியாமைக் காலத்தில் மூழ்கியிருந்த அரேபிய தீபகற்பத்தில் ஒளியாய் வந்திறங்கிய இஸ்லாம் பற்றி துவங்கும் இத்திரைப்படம், அதன் பின்னர் இஸ்லாம் மக்கா நகரத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய நிகழ்வுகளை படிப்படியாய் விவரிக்கிறது.
இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ வந்திறங்கிய நிகழ்வுகள் உள்பட, தூய இஸ்லாத்தை அரேபிய மண்ணில் விதைக்க நபியவர்கள் செய்யும் முயற்சிகளும் அதில் வழி நெடுகிலும் சந்தித்த துயரங்களையும் விவரிக்கும் இத்திரைப்படத்தை இயக்கி இருப்பவர் இயக்குநர் ரிச்சர்ட் ரிக்.
இஸ்லாத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு இறைத்தூதரின் உருவகம் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மனித வரலாற்றின் மிக முக்கிய காலகட்டத்தைப் பற்றிப் பேசுகிறது.
இறைமறை மற்றும் நபிவழித்தொகுப்புகளின் அடிப்படையில் சம்பவங்கள் அமைந்திருக்கும் இத்திரைப்படம், இஸ்லாமிய வரலாற்றைக் கண்முன்னே கொண்டு வந்து காட்டும் வகையில் எளிமையாக வடிவமைக்கப் பட்டுள்ளது. புதிதாக இஸ்லாத்தைத் தழுவுபவர்களுக்கும் இஸ்லாத்தை அறிய விரும்புவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் வியப்பில்லை.
அநீதியும், இனப்பாகுபாடுகளும் மிகுந்திருந்த அக்கால சமுதாயத்தினருக்கு நேர்வழியாக இஸ்லாம் அமைந்தது என்பதை இத்திரைப்படம் தெளிவாக விவரிக்கிறது.
90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த அசைவு திரைப்படத்தில் - இறைத்தூதரை ஓவியமாக வரைதலும் கற்பனை உருவகங்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட காரணத்தினால் - இறைத்தூதரின் உருவகம் இல்லாமை என்பது ஒரு குறையாக பார்ப்பவர் மனதில் தெரிந்தாலும், இஸ்லாத்தின் ஆரம்பகால சரித்திரத்தை அழகாக விளக்கியிருக்கும் முறைகளினால் ஆழமான ஒரு மன நிறைவைப் பெற முடிகிறது.
வெளியான சில நாட்களிலேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களைத் தொடர்ந்து உலகின் பல பாகங்களிலிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த DVD, நவீன தொழில் நுட்பங்களின் அடிப்படையில், எதிர்கால சந்ததியினரையும் கவனத்தில் கொண்டு திறமையாக தயாரிக்கப்பட்டிருக்கும் காரணத்தால் இஸ்லாமிய வரலாற்றை எளிமையான வடிவில் அறிந்து கொள்ள விரும்புவர்களுக்கு இது அரிய ஒரு தகவல் களஞ்சியமாக அமையும் என்றால் அது மிகையில்லை.
தகவல்: அபூ ஸாலிஹா